பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆரோக்கியமான டிஷ்ஷை சுவையாக செய்து வைத்திருங்கள். இதனை ருசித்த உடனே குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்

sundal
- Advertisement -

குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதற்காக தினமும் காலையில் அவசர அவசரமாக கையில் கிடைத்தவற்றை வைத்து ஏதேனும் சமையல் செய்து, அதனை லஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அவர்களுக்கு இந்த உணவு பிடிக்குமா? பிடிக்காதா, அவர்கள் விரும்பி சாப்பிடுவார்களா? என எதையும் யோசித்துச் செய்யும் வகையில் நேரம் இருக்காது. ஆனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக சாப்பிடவும், அவர்களின் களைப்பு தீரவும் இந்த மசாலா சுண்டலை சுட சுட இப்படி சுவையாக செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் சுவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இந்த சுண்டல் உடம்பிற்குத் தேவையான புரதத்தை கொடுப்பதால் வளரும் குழந்தைகளுக்கு இவை ஆரோக்கியமான உணவாக அமைகிறது. வாருங்கள் இந்த மசாலா சுண்டலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை சுண்டல் – கால்கிலோ, வரமிளகாய் – 3, மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், சிறிய வெங்காயம் – 1, மாங்காய் சிறிய துண்டு – 2, உப்பு முக்கால் – ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெள்ளை கடலையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவி, தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 5 அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். சுண்டல் நன்றாக ஊறிய பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை ஒரு குக்கரில் சேர்த்து கொண்டு, அதனுடன் நான்கு தம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி விசில் போட்டு, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் தேங்காய் மற்றும் மாங்காயை காய் துருவலில் பொடியாகத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின், பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வேகவைத்த சுண்டலை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக துருவி வைத்துள்ள மாங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -