வெயில் காலத்திலும் வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகள் வாடாமல் பூத்து குலுங்க இதை செய்தால் போதும்.

rose

நமது இந்திய நாட்டின் தென்னிந்திய பகுதி மக்கள் விவசாயத்திற்கான தண்ணீர் தேவைகளுக்கு பெரும்பாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களையே அதிகம் நம்பி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழகத்தில் பரவலாக நன்கு மழை பெய்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்ததை நாம் அறிவோம். எனினும் இன்னும் சில வாரங்களில் தகிக்கின்ற அனற்காற்று வீசுகின்ற கோடை காலம் தொடங்க இருக்கின்றது. இந்த கோடைகாலம் என்பது மனிதர்களாகிய நமக்கு மட்டும் கடினமான காலமாக இல்லாமல் நமது உணவு மற்றும் இன்ன பிற தேவைகளை பூர்த்தி செய்ய நாம் வளர்கின்ற செடி, மரம், தாவர வகைகளுக்கும் கடினமான காலமாகத் தான் இருக்கின்றது. இத்தகைய கடுமையான கோடை காலத்தை நாம் வீட்டில் வளர்கின்ற செடி மற்றும் மரங்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த சில குறிப்புகளை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

watering-plant

கோடைக்காலங்களில் நீர் நிலைகளில் நீர் வற்றிப் போவது இயல்பான ஒன்று தான். பொதுவாக கோடை காலங்களில் எந்த ஒரு வகை செடியின் வளர்ச்சி மற்றும் அந்த செடி, மரம் காய்ந்து பட்டு போகாமல் தடுக்கவும் நீர் அதிக அளவு தேவைப்படும். அதேநேரம் இக்காலத்தில் மனிதர்களின் தாகத்தை தீர்ப்பதற்கான நீரின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே கோடைக்காலத்தில் நாம் வளர்கின்ற செடி, மரங்களுக்கு அதிகளவில் நீர் ஊற்றாமல், நீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க நீங்கள் வளர்கின்ற செடியின் அடி பகுதியை சுற்றி வைக்கோல் அல்லது பழைய செய்தித்தாள்களை கிழித்து போட்டு வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த வைக்கோல் அல்லது கிழித்து போடப்பட்டிருக்கும் செய்தித்தாள்களின் மீது சிறிதளவு நீர் ஊற்றுவதால் அந்த பொருட்களில் ஈரப்பதம் நீண்ட நேரம் தக்க வைக்கப்பட்டு, செடிகளுக்கு தேவையான ஊட்டத்தை அளித்து, அந்தச் செடிகளை வறண்டுபோகாமல் காப்பதோடு, அடிக்கடி அந்த தாவரங்களுக்கு நாம் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சும் அவசியம் ஏற்படாமல் தடுக்கிறது.

மழை, பனி காலங்களில் நாம் வளர்க்கின்ற செடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு நாம் அதிகளவில் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஆனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பான காலத்திலிருந்தே தினமும் காலையில் சூரிய உதயம் ஏற்படும் நேரத்திலேயே, நம் வளர்கின்ற செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றுவதால் காலையிலிருந்து மாலை வரை நீடிக்கும் சூரிய வெப்பத்தினால் செடிகளின் வேர்களில் ஈரப்பதம் வறண்டு போகாமல் தடுத்து, செடிகள் நன்கு வளர உதவுகிறது. பொதுவாக கோடை காலம் முழுவதும் காலை மற்றும் மதியம் என இரண்டு முறையும் நாம் வளர்க்கின்ற செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருவது செடிகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும்.

money-plant1

நாம் வளர்க்கின்ற செடிகள், தாவரங்களில் சில வகை செடிகளின் வளர்ச்சிக்கு கோடை காலம் உரியதாக இருக்கும். வேறு சில வகை செடிகளின் வளர்ச்சிக்கு கோடைக்காலம் தீங்காய் அமையும். எனினும் பொதுவாக இந்த ஒரு வகை தாவரமும் கோடை காலங்களில் அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும், அனற்காற்றை எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாலும் அந்த செடிவகை விரைவில் பட்டு போய்விடும். எனவே இதைத் தவிர்ப்பதற்கு முடிந்தவரையில் உங்கள் வீடுகளில் நீங்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் பட்சத்தில் அந்த செடிகளை நிழற்பாங்கான இடங்களில் வைத்து, அடிக்கடி தண்ணீர் ஊற்றுவதால் கடுமையான கோடை காலத்திலும் அந்த செடி நன்கு வளர வழிவகை செய்யும்.

ginger-plant-growing

விதைகளை விதைத்து தாவரங்களை வளர்க்க விரும்புபவர்கள் பெரும்பாலும் அந்த விதைகளை மழைக்காலங்களில் விதைத்து வளர்ப்பது நல்லது. சிலர் கோடைக்காலங்களில் விதை விதைத்து வளர்க்க வேண்டிய சூழலில் இருப்பார்கள். இத்தகையவர்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் பூந்தொட்டிகள் அல்லது தோட்டப் பகுதிகளில் விதைகளில் விதைக்கும் போது சற்று ஆழமாக குழி தோண்டி அந்த விதைகளை விதைத்து வைக்க வேண்டும். மேலும் விதை புதைக்கப்பட்ட பிறகு அந்த இடத்தின் மீது தினமும் சிறிதளவு நீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் பூமியில் புதைக்கப்பட்டிருக்கின்ற விதை பூமியில் இருந்து எழுகின்ற வெப்பத்தால், அவிந்து போகாமல் தடுக்கும். மேலும் ஏற்கனவே பெரிய அளவில் வளர்ந்திருக்கின்ற மரங்களுக்கடியில் சிறிதளவு சூரிய வெளிச்சம் படும்படி இருக்கின்ற இடங்களில் விதைகளை விதைப்பதாலும் அந்த செடிகள் நன்கு வளரும்.