காலையில் அவசர அவசரமாக பள்ளிக்கு குழந்தைகளை கிளப்ப, அவர்களின் லஞ்ச் பாக்ஸிற்க்கு சட்டென செய்யக்கூடிய இந்த மோர் குழம்பு சாதத்தை செய்து கொடுங்கள். திரும்பி வரும்பொழுது ஒரு பருக்கை சாதம் கூட மீதம் இருக்காது

more1
- Advertisement -

விடுமுறை நாட்கள் என்றால் நமக்குத் தேவையான நேரத்தில் எழுந்து, சமையல் செய்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் பொறுமையாக கொடுக்கலாம். ஆனால் பள்ளி நாட்களின் போது குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். எனவே ஒரு சில நேரங்களில் தாமதமாக எழுந்து விட்டால் என்ன சமைத்துக் கொடுக்க முடியும் என்ற யோசனை வந்து விடும். இது போன்ற நேரங்களில் சற்றும் யோசிக்காமல் வீட்டில் தயிர் இருந்தால் போதும். உடனே தாளித்து மோர் குழம்பு சாதம் கொடுத்து விடலாம். இப்போது வெயில் காலம் என்பதால் குழந்தைகளின் உடல் சூட்டை சீர் படுத்துவதற்கும் இந்த உணவு துணை புரிகிறது. குழந்தைகளுக்கு வயிற்று வலி, உடல் சூடு போன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும். வாருங்கள் இந்த ஐந்து நிமிட மோர் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தயிர் – அரை லிட்டர், வெங்காயம் – 1, வரமிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனை கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தயிருடன் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சியை சேர்த்தும் கலந்து கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதேபோல் இஞ்சியையும் மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வர மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும். அதன்பின் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு, 3 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலந்துவிட வேண்டும். தண்ணீர் லேசாக சூடானதும் கரைத்து வைத்துள்ள தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, கொத்தமல்லி தழையை தூவி, கலந்து விட்டால் சுவையான மோர் குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -