5 விசிலில் அற்புதமான சுண்டல் குருமா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! ரெண்டு நாளைக்கு அது உங்க மனச விட்டே போகாது.

sundal-kurma
- Advertisement -

விதவிதமான வெஜிடபிள் குருமா இருக்கும் பொழுது சுண்டல் கொண்டு செய்யப்படும் இந்த குருமா கறி குருமாவையே மிஞ்சிவிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை எந்த சுண்டலையும் நீங்கள் உங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முந்தைய நாள் இரவு சுண்டலை ஊற வைத்தால் போதும்! மறுநாள் காய்கறிகளை நறுக்கி மடமடவென பத்தே நிமிடத்தில் குக்கரில் 5 விசில் விட்டு எடுத்தால் போதும், மணமணக்கும் கொண்டைக்கடலை குருமா தயாராகிவிடும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என்று எல்லாவற்றுக்கும் செம்மையான காம்பினேசனாக இருக்கக்கூடிய இந்த குருமா எப்படி செய்யலாம்? என்கிற ரகசியத்தை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

sundal

சுண்டல் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு சுண்டல் – கால் கிலோ, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, தேங்காய் துருவல் – ஒரு மூடி, சோம்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, முந்திரி பருப்பு – 10, கிராம்பு – 2, பட்டை – 1, கசகசா – அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பழுத்த தக்காளி – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், வெறும் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லி தூள் – 2 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை – சிறிதளவு.

- Advertisement -

சுண்டல் குருமா செய்முறை விளக்கம்:
முந்தைய நாள் இரவே நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் மூக்கடலையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 8 மணி நேரமாவது இந்த சுண்டல் ஊறினால் தான் செய்யும் பொழுது சுலபமாக இருக்கும். பின்னர் மறுநாள் சமைக்கும் முன் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைக்க தேவையான பொருட்களை போட வேண்டும். முதலில் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சோம்பு, மிளகு, ஏலக்காய், முந்திரி பருப்பு, கிராம்பு, பட்டை, கசகசா, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முந்திரி உங்கள் விருப்பம் தான், இல்லை என்றால் விட்டுவிடலாம்.

sundal-kurma2

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இஞ்சி பூண்டு விழுது, பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்குவதற்கு கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி மசிந்ததும் அதில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெறும் மிளகாய்த்தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எந்த மசாலாக்களையும் சேர்க்க விரும்பாதவர்கள் நீங்கள் வீட்டிலேயே அரைத்து வைத்திருக்கும் குழம்பு மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கினால் எண்ணெய் தெளிய ஆரம்பிக்கும். பின்னர் ஊற வைத்துள்ள சுண்டலை வடிகட்டி இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். கூடுதல் சுவைக்கு இதனுடன் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை உங்கள் விருப்பம் போல் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் சுண்டல் மட்டுமே போதும்.

sundal-kurma1

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து விட வேண்டியது தான். உப்பு, காரம் சரி பார்த்து குக்கரை மூடி வைத்தால் ஐந்தே விசிலில் மணக்க மணக்க சுண்டல் குருமா தயாராகிவிடும். நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறினால் ரெண்டு நாளைக்கு நீங்கள் சாப்பிட்டது உங்கள் மனதை விட்டு நீக்கவே செய்யாது. அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த சுண்டல் குருமா நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -