சுரைக்காய் அடை தோசை

suraigai adai
- Advertisement -

காலை மற்றும் இரவு நேரத்தில் டிபன் சாப்பிடும் நபர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் இட்லி தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுரைக்காயை வைத்து அடை தோசை செய்வது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் இருக்கிறது. இதில் நீர்ச்சத்து 96 சதவிகிதம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரும்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட், தாது உப்பு என்று பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த சுரைக்காயை அடிக்கடி உணவாக நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். மேலும் உடல் சூடு குறையும். கைகால் எரிச்சல் இருப்பவர்களும் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களும் இந்த காயை அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். அப்படிப்பட்ட சுரைக்காய் வைத்து செய்யக்கூடிய அடை தோசையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 1 டம்ளர்
  • கடலைப்பருப்பு – 1/2 டம்ளர்
  • துவரம் பருப்பு – 1/2 டம்ளர்
  • உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 1 1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • பூண்டு – 15 பல்
  • துருவிய சுரைக்காய் – 2 கை அளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்
  • இஞ்சி – 2 டீஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் – 2 கை அளவு
  • பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை கொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை கழுவி விட்டு 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதே போல் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றையும் தனியாக ஊறவைக்க வேண்டும். 4 மணி நேரம் கழித்து ஊற வைத்ததை கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

அதேபோல் ஊர வைத்த மசாலாக்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து மாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவை நைசாக அரைக்க கூடாது. கொரகொரவென்று தான் அரைக்க வேண்டும். அரைத்த பிறகு அதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் கடுகு கடலைப்பருப்பு இஞ்சி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் துருவி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சுரைக்காயில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. இறக்குவதற்கு முன்பாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். இப்பொழுது இந்த கலவை ஆறிய பிறகு இதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் தோசை கல்லை வைத்து மாவை அடை பதத்திற்கு கனமாக ஊற்ற வேண்டும். அடை சாப்பிட விரும்பாதவர்கள் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசையாக கூட ஊற்றி சாப்பிடலாம். இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கோதுமை மாவு இட்லி செய்வது எப்படி?

சத்து மிகுந்த காய்கறிகளை உண்ண மறுக்கும் குடும்பத்தினருக்கு இப்படி ஏதாவது ஒரு முறையில் உணவில் சேர்த்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேலோங்கும்.

- Advertisement -