இந்த ஃபிளேவரில் இதுவரைக்கும் நீங்க சட்னி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. சுட்ட சட்னி ரெசிபி உங்களுக்காக.

chutney
- Advertisement -

எப்போதும் போல ஒரே மாதிரி சட்னி செய்யாமல் வித்தியாசமான ருசியில் இப்படி கூட சட்னி செய்து சாப்பிடலாம். எப்போதும் வெங்காயத்தை வதக்கி தானே சட்னி அரைப்போம். இன்று வெங்காயத்தையும் பூண்டையும் அடுப்பில் வைத்து சுட்டு சட்னி செய்ய போகின்றோம். ரொம்பவும் கஷ்டம் கிடையாது. மிக மிக சுலபமான முறையில் சுட்ட வெங்காய சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி தான் இன்றைக்கான ரெசிபி. நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம் வாருங்கள்.

2 பெரிய வெங்காயம், 4 சின்ன வெங்காயம், 1 பெரிய பூண்டு இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வெட்ட வேண்டாம். தோல் உரிக்க வேண்டாம். மீடியம் சைஸில் இருக்கக்கூடிய வெங்காயமாக எடுத்துக்கோங்க. ரொம்பவும் பெரிய சைஸில் இருக்கும் வெங்காயத்தை இந்த குறிப்புக்கு பயன்படுத்த வேண்டாம். ஓரளவுக்கு பெரிய முழு பூண்டாக இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பைப் பற்ற வைத்து, மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். புல்கா போடுவதற்கு ஒரு இரும்பு கம்பி கொடுப்பாங்க இல்லையா. அதை அடுப்பின் மேலே வைத்துவிட்டு அந்த கம்பிக்கு மேலே எடுத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு இந்த மூன்றையும் முழுசாக வைத்து ஒரு இடுக்கியில் திருப்பி திருப்பி போட்டு சுட்டுக் கொள்ள வேண்டும். மேலே இருக்கும் தோல் கருகி இந்த பொருட்கள் எல்லாம் வெந்து லேசாக வாசம் வீசும். அந்த அளவிற்கு சுட்டுக் கொள்ளுங்கள். சுட்ட இந்த மூன்று பொருட்களையும் ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு இதன் மேலே இருக்கும் தோலை மட்டும் நீக்கிவிட வேண்டும். மற்றபடி இதை கழுவ வேண்டாம். நாம் சுட்டிருக்கும் வாசம் இதில் அப்படியே இருக்கட்டும். பூண்டு பற்களை தனித்தனி பற்களாக பிரித்து தோல் உரித்து கொள்ளுங்கள். வெங்காயத்தை தோள் சீவி ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். (சுட்டு தோல் உரித்து வெட்டி வைத்திருக்கும் பூண்டையும் வெங்காயத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 5, கோலிக் குண்டு – புளி, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வறுத்து இதையும் மிக்ஸி ஜாரில் இருக்கும் வெங்காயம் பூண்டோடு ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டியாக சட்னியை அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சிறிய தாளிப்பு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் இந்த சட்னியை தாளிப்பில் கொட்டி ஒரே நிமிடம் சூடு படுத்தி அடுப்பை அணைத்துவிட்டு, இதை அப்படியே இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்களேன். அருமையான சுவை இருக்கும். தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம். வித்தியாசமான ஃபிளேவரில் வித்தியாசமான சுட்ட வெங்காய பூண்டு சட்னியை செய்து பார்க்க யாரும் தவறாதிங்க.

- Advertisement -