மிளகு ரசம் இப்படி வைத்து பாருங்கள். மணக்க மணக்க நீங்க வைக்கிற ரசத்தின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

rasam_tamil
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி ரசம் வைப்பார்கள் இல்லையா. இன்றைக்கு நாம் ஒரு மிளகு ரசம் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். வழக்கம் போல ரசத்தில் சேர்க்க கூடிய எல்லா பொருட்களும் சேர்த்து இந்த ரசத்தை வைத்தாலும், இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த ரசத்தையும் வைத்து பாருங்கள். மழைக்காலத்துக்கு சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட கூடுதல் சுவை ரசம் கிடைக்கும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளி, பழுத்த 1 பெரிய தக்காளியை போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி நன்றாக ஊற வைத்து விடுங்கள். ஊறிய பின்பு உங்கள் கையைக் கொண்டு புளியையும் தக்காளியையும் நன்றாக கரைத்து ஒரு கரைசலை தயார்படுத்தி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், வர மல்லி 1 ஸ்பூன், வெந்தயம் 1 சிட்டிகை, வரமிளகாய் 2, பூண்டு பல் 10, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொரகொரப்பாக ஓட்ட வேண்டும். கட்டி பெருங்காயம் இருந்தால் அதையும் இதில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தூள் பெருங்காயத்தை ரசத்தில் சேர்க்கலாம்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு, 2 வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கொறகொறப்பான பொடியை இந்த எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் மட்டும் கருகாமல் வதக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இதை செய்யுங்கள். (இந்த பொடி மட்டும் எண்ணெயில் கருகி விட்டால் ரசம் சுத்தமாக சுவை தராது.)

- Advertisement -

அதன் பின்பு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கரைத்து வைத்திருக்கும் புளி தக்காளி கரைசலை இதில் ஊற்றி, இரண்டு பெரிய டம்ளர் அளவு தண்ணீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூளை தூவி நன்றாக கலந்து விட்டு அப்படியே அடுப்பை மீடியம் தீயில் வைத்து விடுங்கள். (வாயில் கொஞ்சம் இந்த ரசத்தை எடுத்து சுவை பாருங்கள். புளி சரியாக இருந்தால் விட்டு விடுங்கள். புளி கொஞ்சம் தூக்கலாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கூட சேர்க்கலாம்.)

ரசம் நுரை கட்டி கொதித்து வரும்போது கரண்டியை வைத்து ஒரு முறை கலந்த விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே அடுப்பை அணைத்து விடுங்கள். (ரசம் நுரை கட்டி ஒரு கொடி தான் வர வேண்டும்.) அவ்வளவுதான் சூப்பரான ரசம் கமகமன்னு வாசத்தோடு உங்களுக்கு கிடைக்கும்.

பின்குறிப்பு: உங்களுக்கு புளியை அப்படியே போட பிடிக்கவில்லை, புளிக்கரைசலை எடுத்து தான் ரசம் வைக்க பிடிக்கும் என்றால் புளி கரைசலை எடுத்து திப்பியை நீக்கி விட்டு, அதில் தக்காளியை போட்டு கரைத்தும் ரசம் வைக்கலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -