சும்மா இருக்கும் போது பூண்டை உரித்து வைத்துக் கொள்ளுங்கள், சட்டுன்னு 10 நிமிஷத்துல இப்படி ஒரு குழம்பு வச்சு அசத்திடலாம்!

poondu-garlic-kulambu
- Advertisement -

தினமும் என்னடா குழம்பு செய்வது? என்று யோசிக்கும் பொழுது சில சமயங்களில் பூண்டு கைவசம் இருந்தால் சட்டுன்னு பூண்டு குழம்பு வைத்து விடுவோம். எப்போதும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற காய்கறிகளை நாம் டிவி பார்க்கும் போதோ அல்லது மற்ற ஓய்வு நேரங்களில் உரித்து வைத்துக் கொண்டால் அசத்தலான பூண்டு குழம்பை இப்படி கூட 10 நிமிஷத்தில் வச்சிடலாம். சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்.

பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
உரித்த பூண்டு பற்கள் – ஒரு கப், புளி – பெரிய எலுமிச்சை அளவு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, மிளகு – 1/2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் – மூன்று குழிக்கரண்டி அளவு.

- Advertisement -

பூண்டு குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் புளியை எலுமிச்சை அளவிற்கு நன்கு ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து 1 ஸ்பூன் கல் உப்பு போட்டு கரைத்து ஊற வைத்து விடுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். இது போல் கார குழம்பு வகைகளுக்கு நல்லெண்ணெய் சேர்ப்பது தான் உடலுக்கு நல்லது. காரம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் என்பதால் நல்லெண்ணெய் அதனை தணித்து விடும்.

இப்போது அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள். நல்லெண்ணெய் காய்ந்து புகை வரும் பொழுது கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயம் கருகிவிடக் கூடாது எனவே வெந்தயம் சேர்த்ததும் கறிவேப்பிலையை பச்சையாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பெரிய வெங்காயத்திற்கு பதிலாக 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பூண்டு நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கி வரும் வரை வதக்கி விடுங்கள். பின்னர் மிளகு மற்றும் சீரகத்தை ஒரு சிறிய உரலில் போட்டு நன்கு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளுங்கள். இதையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். எல்லாமே சுருள வதங்கி வந்த பிறகு நீங்கள் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்க வேண்டும்.

புளியுடன் குழம்பு மிளகாய்த்தூள் ஊறும் பொழுது உங்களுக்கு குழம்பு இன்னும் ருசி கூடுதலாக தரும். புளி கரைசலை சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் எந்த அளவிற்கு கெட்டியாக குழம்பை கொதிக்க வைக்கிறீர்களோ அந்த அளவிற்கு குழம்பு ருசியாக இருக்கும். குழம்பு கொதித்து பச்சை வாசம் போக கெட்டியாக ஆனதும் நறுக்கிய மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அவ்வளவு ருசியாக வத்த குழம்பு போல் சூப்பராக இருக்கும். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -