தமிழ் மாதங்கள் பெயர்கள் | Tamil mathangal name list in Tamil

Tamil mathangal name list in Tamil
- Advertisement -

தமிழ் மாதங்கள் பெயர்கள் | Tamil mathangal list in Tamil

பொதுவாக இந்தியாவில் ஒரு சில மொழியினர் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களையும், ஒரு சிலர் சூரியனை அடிப்படையாக கொண்ட மாதங்களையும் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் சூரியனை அடிப்படையாக கொண்ட மாதங்களை பின்பற்றும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கு தமிழ் மாதம் தொடக்கம் என்பது சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதம் தான் எனினும் தமிழர்களின் மாதங்கள் ஜோதிட சாஸ்திர அடிப்படையில் அந்தந்த மாதங்களில் சூரியன் பிரவேசிக்கும் ராசியின் பெயர்களால் அழைக்கப்படும். அந்த மாதங்கள் பிறக்கின்ற நட்சத்திரங்களின் பெயர்களிலேயே தமிழ் மாதங்கள் உள்ளன. அந்த வகையில் நாம் தற்போது பின்பற்றுகின்ற 12 தமிழ் மாதங்கள் பெயர்கள் (Tamil mathangal name list in Tamil) குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மாதங்கள் வரிசை – Tamil month name list in Tamil

தமிழ் மாதங்கள் எத்தனை: தமிழ் மாதங்கள் மொத்தம் 12 உள்ளன. தற்போது வழக்கத்தில் உள்ள வரிசைப்படி தமிழ் மாதங்கள் பெயர்கள் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சித்திரை மாதம் – தமிழ் மாதம் list

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை நட்சத்திரத்தன்று தான் அம்மாதத்திற்குரிய பௌர்ணமி தினம் வருகிறது. வடமொழியில் இந்த மாதத்தை சைத்ர எனவும் தமிழ் மொழியில் சித்திரை மாதம் எனவும் அழைக்கின்றனர்.

வைகாசி மாதம்

சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் மாதமே வைகாசி மாதம் ஆகும். வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திர தினத்தன்று தான் அம்மாதத்திற்குரிய பௌர்ணமி திதி வருகிறது. வடமொழியில் இந்த மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறப்பதால், அதை அடிப்படையாகக் கொண்டு மாதத்திற்கு “பைசாகி” என வடமொழியில் பெயரிடப்பட்டது. தமிழ் மொழியில் இந்த ‘பைசாகி” என்பதற்க்கு சரியான தமிழ் பதமான “வைகாசி” என பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனி மாதம்

மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமே ஆனி மாதம் எனப்படுகிறது. இந்த ஆனி மாதத்தில் வருகின்ற அனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி தினம் வருவதால், இம் மாதத்திற்கு வடமொழியில் “அனுஷா” என பெயரிட்டனர். இந்த அனுஷா மாதத்திற்கு தமிழில் “ஆனி” மாதம் என பெயரிடப்பட்டது.

ஆடி மாதம் – Tamil mathangal name list in Tamil

கடக ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் காலமே ஆடி மாதம் எனப்படுகிறது. இந்த மாதத்தை வடமொழியில் “ஆஷாட” மாதம் என அழைக்கின்றனர். இந்த ஆஷாட மாதத்தில் “பூர்வாஷாடம்” “உத்திராடம்’ என இரு பிரிவுகள் உள்ளன. இதில் “பூர்வாஷாடா” என்பது பூராடம் நட்சத்திரத்தையும், உத்திராடம் என்பது உத்திராடம் நட்சத்திரத்தையும் குறிப்பதாகும். இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த ஆஷாட மாதத்தில் பவுர்ணமி பிறப்பதால், இதை ஆஷாட மாதம் என அழைத்தனர். இந்த ஆஷாட மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் என அழைக்கப்படுகிறது.

- Advertisement -

ஆவணி மாதம்

சூரிய பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. வடமொழியில் இம்மாதத்தை ஷ்ரவண மாதம் என அழைக்கின்றனர். ஷ்ரவணம் என்பது திருவோணம் நட்சத்திரத்தை குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். இந்த திருவோணம் நட்சத்திரத்தில் பௌர்ணமி பிறப்பதால், அந்த நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே ஷ்ரவண மாதம் என வடமொழியில் அழைக்கின்றனர். தமிழில் ஷ்ரவணம் மாதத்திற்கு, வடமொழியில் உள்ள அந்த பெயர் நீக்கப்பட்டு ஆவணி மாதம் என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநில மக்கள் திருவோணம் நட்சத்திரத்தில் பௌர்ணமி தோன்றும் இந்த ஷ்ரவண மாதத்தில் ஓணம் பண்டிகையை தங்களின் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.

புரட்டாசி மாதம்

கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்தான் புரட்டாசி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தில் தான் பௌர்ணமி பிறக்கின்றது. உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு வடமொழியில் உத்திர பிருஷ்டபதம் என பெயர். இதில் பிருஷ்டபதம் எனும் வடமொழிச் சொல் திரிந்து புரட்டாசி என மருவி, இந்த மாதத்திற்கு தமிழில் புரட்டாசி மாதம் என பெயர் உண்டானது.

ஐப்பசி மாதம்

துலாம் ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமே ஐப்பசி மாதம் எனப்படுகிறது. வட மொழியில் ஆச்வயுஜம், அஸ்வினி ஆகிய பெயர்கள் அஸ்வதி எனப்படும் அஸ்வினி நட்சத்திரத்தை குறிக்கின்றன. ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திர தினத்தில் பௌர்ணமி திதி வருவதால், இந்த மாதம் வட மொழியில் ஆச்வயுஜம் மாதம் என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தமிழ் மொழியில் ஐப்பசி மாதம் என பெயர் பெற்றது.

கார்த்திகை மாதம்

விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் என்பதால் இம்மாதத்திற்கு கார்த்திகை மாதம் என பெயர் உண்டானது. கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதி வருவதால் இந்த மாதத்திற்கு வடமொழியில் கிருத்திகா என பெயர் ஏற்பட்டது. அந்த நட்சத்திர பெயரே தமிழில் கார்த்திகை என பெயர் மாற்றமடைந்தது.

மார்கழி மாதம்

சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலமே மார்கழி மாதம் என அழைக்கப்படுகிறது. வட மொழியில் ம்ருகக்ஷீர்ஷம் எனப்படும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் இந்த மார்கழி மாதத்தில் பௌர்ணமி தினம் பிறக்கின்றது. இந்த நட்சத்திரத்தை குறிக்கும் வகையில் ம்ருகஷீர்ஷ என வடமொழியில் அழைக்கப்பட்ட இந்த மாதம், தமிழ் மொழியில் மார்கழி மாதம் என அழைக்கப்படுகிறது.

தை மாதம்

மகர ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் காலமே தை மாதம் எனப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி திதி வரும். வடமொழியில் பூசம் நட்சத்திரத்துக்கு புஷ்யம் எனவும் தைஷ்யம் எனவும் இரு பெயர்களுண்டு. பௌர்ணமி தைஷ்யத்தில் வருகின்ற மாதம் என்பதால், இம்மாதத்திற்குரிய தைஷ்யம் என்பது காலப்போக்கில் மருவி தமிழில் “தை” மாதம் என உருவானது.

மாசி மாதம்

கும்ப ராசியில் சூரிய பகவான் பிரவேசிப்பதால் இம் மாதத்திற்கு மாசி மாதம் எனப் பெயர் உண்டானது. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி திதி வரும் என்பதால் இந்த மாதம் வடமொழியில் மாகி மாதம் என அழைக்கப்பட்டு, அது மருவி தமிழ் மொழியில் மாசி மாதம் என உருவானது.

பங்குனி மாதம்

மீன ராசியில் சூரிய பகவான் இம்மாதத்தில் பிரவேசிப்பதால் இதற்கு பங்குனி மாதம் எனும் பெயர் உண்டானது. வடமொழியில் இம் மாதத்தை பால்குனி என்பார்கள். அதிலும் இம்மாதத்தை பூர்வ பல்குனி எனவும் உத்திர பால்குனி எனவும் இரு வகையாக அழைக்கின்றனர். பூர்வ பல்குனி என்பது பூரம் நட்சத்திரத்தையும், உத்திர பால்குனி என்பது உத்திரம் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த பங்குனி மாதம் பிறப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தமிழில் பால்குனி மாதம் என்பது மருவி பங்குனி மாதம் என இம்மாத்திற்கு பெயர் உண்டானது.

தூய தமிழ் மாதங்கள் பெயர்கள் – Tamil matham name list in Tamil

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் மாதங்களின் பெயர்களுக்கான தூய தமிழ் மாத பெயர்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தை – சுறவம்
மாசி – கும்பம்
பங்குனி – பங்குனி
சித்திரை – சித்திரை
வைகாசி – விடை
ஆனி – ஆடவை
ஆடி – கடகம்
ஆவணி – மடங்கல்
புரட்டாசி – கன்னி
ஐப்பசி – துலை
கார்த்திகை – நளி
மார்கழி – சிலை

தமிழ் மாதங்கள் பெயர் காரணம்: இதில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களின் பெயர்களும் தற்போது தூய தமிழில் இல்லை. அதே சமயம் மாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களின் பெயர்கள், சூரியன் எந்த ராசியில் அந்த சமயத்தில் பிரவேசிக்கிறாரோ அதை அடிப்படையாக கொண்டே தூய தமிழில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -