மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் அணுகூலம் நிறைந்த வருடமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சீக்கிரம் நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் வேண்டாம். முன்னேற வேண்டும் என்றால் இந்த வருடம் கூடுதல் உழைப்பை முதலீடாக போடுங்கள். வியாபாரத்திலும் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். வெளியில் கொடுத்த பணம் சீக்கிரம் வராது. வசூல் செய்வதில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் பிறக்கும். சில பேருக்கு அடிக்கடி இந்த வருடம் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் அமையும். இந்த வருடம் முழுவதும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால், ஒரு வெள்ளை காகிதத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மாதத்தில் ஒருமுறையாவது, 11 முறை ஓம் சரவணபவ மந்திரத்தை எழுதவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் சந்தோஷமான வருடமாக இருக்கப் போகின்றது. நிறைய புது அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதுப்புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழிக்க கூடாது. வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு முயற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும், என்னால் முடியாது, எனக்கு இது கஷ்டம், என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக பேசுங்கள். நிச்சயம் இந்த வருடத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். சொத்து சுகம் வாங்க, புது வாகனம் வாங்குவதற்கெல்லாம் நல்ல அணுகுல அமைப்பு சேர்ந்து வந்திருக்கிறது. அக்கம் பக்கம் வீட்டாரிடம் சகஜமாக பேசி பழகவும். மேலதிகாரிகளை எல்லாம் பகைத்துக் கொள்ளக் கூடாது. எல்லா இடத்திலும் பொறுமையாக இருந்தால் இந்த வருடம் நீங்கள் நிச்சயம் சாதிக்கலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் பொறுமை தேவை. அடாவடியாக செயல்படக் கூடாது. அவசரமாக முடிவு எடுக்கக் கூடாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெரியவர்களிடம் கொஞ்சம் ஆலோசனை கேட்க வேண்டும். வியாபாரத்தில் முடிவு எடுக்கும் போது நிதானம் தேவை. முதலீடு செய்யும் போது நிதானம் தேவை. கடன் வாங்கும் போதும் நிதானம் தேவை. நிதானமாக செயல்பட்டால் இந்த வருடம் முழுவதும் நீங்கள் வெற்றி காணலாம். மற்றபடி பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக வரும். பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. சொத்து சுகம் வாங்கும் யோகமும் இருக்கிறது. பெண்களுக்கு கணவரோடு இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். மாதத்தில் ஒரு திங்கட்கிழமையாவது சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் முன்னேற்றம் நிறைந்த வருடம் ஆக இருக்கப் போகின்றது. இதுநாள் வரை வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எது சரி, எது தவறு என்று அலசி ஆராய்ந்து பார்க்கக்கூடிய திறமை உண்டாகும். எல்லோரையும் நல்லவர்கள் எல்லோரும் தேவை என்று ஓடி ஓடி பணிவிடை செய்திருப்பீர்கள். ஆனால் இனி வரக்கூடிய காலகட்டத்தில் யாருக்கு என்ன செய்ய வேண்டும், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும், யாரை எந்த இடத்தில் வைத்து நடத்த வேண்டும் என்பதையெல்லாம் சரியாக புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டம் வரும். அனுபவரீதியாக நல்லமாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த வருடம் பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தை கவனிப்பது மிக மிக முக்கியம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். சோம்பேறித்தனம் வேண்டாம். மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை அன்று குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் புதுப்புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், நிறைய அதிசயங்கள் நடக்கும். உங்களுக்கு மன சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுகளும், சுயமரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை லாபத்தை எடுக்க, நீங்கள் கொஞ்சம் கூடுதல் உழைப்பை முதலீடாக போட வேண்டும். கடனை திரும்பவும் வசூல் செய்வதில் சில சிரமங்கள் இருக்கும். புதுசாக யாருக்கும் இந்த வருடம் அதிகம் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த வருடம் நீங்கள் அடுத்தவர்களுக்கு தானதர்மம் செய்யக்கூடிய காரியங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். உங்களை பொது பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாரத்தில் ஒரு திங்கட்கிழமை யாவது விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கு போடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் நன்மைகள் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிறைய வெற்றிகள் வந்து குவியும் வருடமாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் குழப்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்த வருடம் நல்லதொரு தீர்வு கிடைத்துவிடும். எதிரிகளுடைய தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக பதிலை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நிறைய முன்னேற்றம் இருக்கும். இழந்த கௌரவத்தை மீட்டெடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உடல் பருமனோடு இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பது அளவான உணவை சாப்பிடுவது இது போன்ற பழக்க வழக்கங்களில் ஆர்வம் காட்டுங்கள். பெண்கள் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் உறவுகளுக்கு இடையே கடின வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டாம். மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமி அன்று உங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் வழிபாட்டை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய வருடமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் குடும்பப் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படும். சில பேருக்கு நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். இதனால் அலைச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் சேமிப்பை அதிகப்படுத்துவதில் ஆர்வம் காட்டினால் நல்லது. வீட்டில் இருக்கும் பெண்கள் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் அழுவதை நிறுத்தி விடுங்கள். எதிர்த்துப் போராடினால் நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். கோழையாக இருப்பவர்களுக்கு இந்த வருடம் வாய்ப்பு இல்லை. தைரியசாலிகளை இந்த வருடம் வரவேர்க்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோவிலுக்கு விளக்கு போட்டால் உங்களுக்கு பெரிய நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வருடம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அதற்காக உடனே பயந்து விடக்கூடாது. ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்றால் கவனம் குறைவாக இருக்கக் கூடாது என்று அர்த்தம். பொறுப்புகள் உங்களுக்கு அதிகமாக வரும். அந்த பொறுப்புகளை எல்லாம் சுமப்பதற்கு கூடுதல் கவனம் தேவைதானே. எவ்வளவு பெரிய சிரமம் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய மன தைரியம் உங்களுக்கு தேவை. பிரச்சனைகள் வந்தால் உடனே ஒரு இடத்தில் அமர்ந்து விடக்கூடாது. துணிச்சல் போராட்டம் உங்களுக்கான வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். வேலையில் எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைத்து விடும். வியாபாரத்தில் எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவு லாபத்தை எடுக்கலாம். ஆசிரியர் தொழில் செய்பவர்கள், வழக்கறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு எல்லாம் இந்த வருடம் அமோகமான வெற்றி கிடைக்க காத்துக் கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை தோறும் குரு பகவான் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் வேகம் அதிகமாக இருக்கும், விவேகமும் அதிகமாக இருக்கும். எந்த அளவுக்கு வேகத்தோடு செயல்படுகிறீர்களோ அதே அளவுக்கு ஒரு காலை முன்னால் எடுத்து வைக்கும் போது, கவனத்தோடும் செயல்படுவீர்கள். எதிரிகளுடைய சூழ்ச்சியை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த கடன் எல்லாம் தானாக தேடி வந்து கொடுப்பார்கள். வாய்ப்புகளை இந்த வருடம் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறது. வீண்விரய செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த வருடம் நல்ல வருமானம் இருக்கும். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு மரியாதையும் கிடைக்கும். பெண்களுக்கும் இந்த வருடம் கூடுதல் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. வாரத்தில் ஒரு நாள் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் வாங்கி கொடுத்த அர்ச்சனை செய்வது உங்களுக்கான தடைகளை விலக்கிவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிம்மதி கிடைக்கக்கூடிய வருடமாக இருக்கப் போகிறது. பல நாள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இதுநாள் வரை கொடுக்கவே முடியாத கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும். சொத்தை விற்பதாக இருந்தால் அதன் மூலம் உங்களுக்கு பெரிய அளவில் லாபம் வரும். அடிமாட்டு விலைக்கு கேட்ட சொத்தை கூட இந்த வருடம் நீங்கள் 10 மடங்கு லாபம் வைத்து விற்கலாம். நல்லதே நடக்கும். நீங்கள் வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். வீண்விரய செலவுகள் எல்லாம் குறையும். நீண்ட நாள் உடல் உபாதைகள் சரியாகும். புதிய நண்பர்கள் உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அயராது உழைத்து உங்களுக்கான பெயரை நிலை நாட்டுவீர்கள். சந்தோஷம் நிறைவாக இருக்கும். கவலைப்படாதீங்க கவலைகள் விலகக் கூடிய வருடம் தான் இது. தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வருடம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் சொல்கிறார்கள் என்று உங்களுடைய வேலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரக் கூடாது. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். செலவுகளை குறைக்க வேண்டும். எதிர்காலத்திற்கு சேமிப்பு முக்கியம் என்பதை உணர வேண்டும். வாழ்க்கை துணை பேச்சை கேட்க வேண்டும். அடம் பிடிக்கக்கூடாது. முன்கோபம் படக்கூடாது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. பொய் பேசக்கூடாது குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே கூடாது. புதிய மனிதர்களின் நட்பு எந்த அளவுக்கு நல்லது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். எதிரிகளுடைய அசைவை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். கூடுதல் கவனம் இந்த வருடம் தேவை. அதற்காக பயப்பட வேண்டாம். நல்லது நடக்கும் இருந்தாலும் நாம் கவனத்தோடு இருப்பது பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும். வாரத்தில் ஒரு சனிக்கிழமை ஆவது அனுமனை வழிபாடு செய்யுங்கள். மன தைரியம் அதிகரிக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபடக் கூடிய வாய்ப்புகள் சீக்கிரம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முன்னேற்றம் தரும் வருடமாக இருக்கும். இதனால் வரை பட்ட கஷ்டத்திற்கு கட்டாயம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இருந்தாலும் நீங்கள் மனதில் தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் மனம் குழம்பக் கூடாது. அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு, மனம் தடுமாறக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சோம்பேறித்தனத்தை விட்டுருங்க. செலவை 10 மடங்கு குறைக்க வேண்டும். வருமானத்தை 100 மடங்கு அதிகரிக்க வேண்டும். அதற்கான வழியை மட்டும் பாருங்கள். வாய் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் நிச்சயம் அமோகமான வெற்றி காணலாம். வேளையிலும் சரி வியாபாரத்திலும் சரி எல்லோரையும் அப்படியே நம்ப கூடாது. மேலே வெள்ளை காக்கா பறக்குதுனா கூட நீங்க நம்புவீங்க. ஆனால் அதை எல்லாம் இனிமேல் விட்ருங்க. ரொம்பவும் ஏமாளியாக இருந்தால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். பெண்கள் இந்த வருடம் நிதானமாக இருக்க வேண்டும். நினைத்த விஷயங்களை சாதித்துக் கொள்ள கொஞ்சம் நேரம் காலம் எடுக்கத்தான் செய்யும். இந்த வருடம் முழுதும் சிவனை கும்பிடுங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.