வீட்டில் இந்த இரண்டு காய்கள் இருந்தால் போதும். உடனே இப்படி சுவையான ஒரு குழம்பு செய்து பாருங்கள். இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட எச்சில் ஊறும் சுவையில் அருமையாக இருக்கும்

kara
- Advertisement -

மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, ரசம் என இதுபோன்ற குழம்பு வகைகள் தான் செய்வதுண்டு. காரக்குழம்பு என்பதில் பல வகை இருக்கிறது. தக்காளி குழம்பு, வெங்காய குழம்பு, வெந்தய குழம்பு, பூண்டு குழம்பு, மிளகு குழம்பு இது போன்று பல விதமான குழம்புகள் இருக்கிறது. இந்த குழம்பை காய்கள் சேர்த்து செய்யும் பொழுது ஒரு வித சுவையிலும், காய்கள் இல்லாமல் செய்யும் பொழுது ஒருவித சுவையிலும் இருக்கும். அப்படி கத்தரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு என எந்த காய்கள் வீட்டில் இருந்தாலும் அவற்றில் ஒன்று சேர்த்தால் போதும். அந்த குழம்பின் சுவை அருமையாக வந்துவிடும். அவ்வாறு வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் வைத்து ஒரு முறை இந்த புளிக்குழம்பு செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 20, முருங்கைக்காய் – 3, தக்காளி – 3, பெரிய உருளைக்கிழங்கு – 1, புளி – எலுமிச்சைப்பழ அளவு, நல்லெண்ணெய் – 150 கிராம், மிளகாய்த்தூள் – இரண்டரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வெல்லம் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் ஊற்றி, ஊற வைத்து, அதனை கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்க வேண்டும். பின்னர் 3 தக்காளியை நான்காக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, 150 கிராம் நல்லெண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அவற்றையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் மிளகாய்த்தூள் சேர்த்து, ஒரு முறை நன்றாக வதக்கி, மூன்றிலிருந்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, குழம்பை கொதிக்க விடவேண்டும். பிறகு இதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து, தட்டு போட்டு மூடி, ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு, இறுதியாக ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -