பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா ஹோட்டல் சுவையில் உங்களுக்கும் வருவதற்கு இந்த 1 பொருளையும் சேர்த்து சமைச்சு பாருங்க!

poori-potato-masala1
- Advertisement -

சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக் கொள்ள இதை விட சிறந்த காம்பினேஷன் எதுவும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உருளைக்கிழங்கு மசாலா வைத்துக் கொடுத்தால் எவ்வளவு சப்பாத்திகளையும் உள்ளே இறக்கி விடுவார்கள். அதிலும் பூரி என்றால் சொல்லவா வேண்டும்? சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என்று கேட்கத் தூண்டும் இந்த பூரிக்கு ஹோட்டல் சுவையில் அட்டகாசமான முறையில் எப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்!

potato-urulai

பூரிக் கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – மூன்று, தக்காளி – 1, பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

பூரிக் கிழங்கு செய்முறை விளக்கம்:
பூரி சுடுவதற்கு முதலில் கால் கிலோ உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு முறை நன்கு தண்ணீரில் கழுவி குக்கரில் இரண்டாக வெட்டி ஒவ்வொரு கிழங்கையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று விசில் விட்டு எடுங்கள். உருளைக்கிழங்கை நீங்கள் நறுக்காமல் முழுதாக அப்படியே சேர்த்தால் வேக நிறைய நேரம் எடுக்கும். எனவே இப்படி வெட்டி சேருங்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

poori-potato-masala

உருளைக்கிழங்கு வெந்ததும் அதனை ஆறவிட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் சோம்பு, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். சோம்பின் மணம் இந்த மசாலாவிற்கு கூடுதல் சிறப்பம்சமாகும்.

- Advertisement -

பின்னர் துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், 1 வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ரெண்டு பச்சை மிளகாய்களை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவரின் பச்சை வாசம் போக நன்கு வதக்கிய பின்னர் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

poori-onion-masala

பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஒருமுறை நன்கு வதக்கி தேவையான அளவிற்கு உப்பு போட்டு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு மசாலா சற்று தளர்வாக இருக்க வேண்டும். எனவே தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்கு கொதிக்க விடுங்கள். இவை கொதித்து வரும் வேளையில் கடைசியாக பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். இது ஹோட்டல் சுவையை கொடுக்கும். பின்னர் இவை கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட பூரியுடன் பரிமாற வேண்டியது தான். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள இதே போல நீங்களும் செய்து பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -