மிக்ஸியிலேயே அரைக்கலாம் கார அடை! ஆரோக்கியமான கார அடை எளிதாக செய்வது எப்படி தெரியுமா?

adai
- Advertisement -

அடைக்கு இட்லி, தோசைக்கு அரைப்பது போல மாவு அரைத்து நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது எனவே அப்போதைய தேவைக்கு இன்ஸ்டன்டாக மிக்ஸியில் அரைக்க கூடிய வகையில் இந்த கார அடை செய்து பாருங்கள். ரொம்பவே சுலபமான மற்றும் ஆரோக்கியமான கார அடை எப்படி நம் வீட்டிலேயே அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கார அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 8, சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, காஷ்மீரி மிளகாய் – 3, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – 2 இணுக்கு.

- Advertisement -

கார அடை செய்முறை விளக்கம்:
முதலில் அடைக்கு தேவையான பொருட்களை மேற்கூறிய அளவின் படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி ஓரிரு முறை நன்கு அலசிய பின் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது நன்கு ஊறி இருக்க வேண்டும். அப்பொழுது தான் அடைக்கு மாவு நன்றாக வரும். நான்கு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்துள்ள பொருட்களை தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை தெளித்து தெளித்து இப்பொழுது ஆட்ட வேண்டும். இவற்றுடன் சீரகம், சோம்பு, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை மட்டும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடைக்கு மாவு மிகவும் நைஸாக இருக்கக் கூடாது. எனவே ரொம்ப நைஸாக அரைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து ஆட்டுங்கள். பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேவையான அளவிற்கு அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அடைக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். தோசை மாவு போல நீர்க்க இருக்க கூடாது. அடைக்கு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும், எனவே தண்ணீர் ஊற்றும் பொழுது பார்த்து ஊற்ற வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். கல் சூடேறியதும் மீடியமாக வைத்து கொண்டு அடை மாவை ஊற்றி கெட்டியாக பரப்பி விடுங்கள். ஒருபுறம் நன்கு வெந்ததும், சுற்றிலும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். இன்னொருபுறம் வேகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒவ்வொரு அடை ஊற்றும் பொழுதும், ஒரு முறை தோசை கல்லில் தண்ணீரை தெளித்து பிறகு ஊற்றுங்கள். அப்போது தான் ஒட்டாமல் அழகாக எடுக்க வரும். அவ்வளவுதாங்க ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த கார அடை தோசை மாவு இதே முறையில் நீங்களும் எளிதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -