சூடான இட்லி, தோசை, சாதத்துடன் தொட்டுக் கொள்ள ‘கத்தரிக்காய் கொத்சு’ 2 விசிலில் இப்படி செஞ்சு பாருங்க சட்னியே அரைக்க வேண்டாம்!

kathirikai-gothsu
- Advertisement -

சதா சட்னி செய்து போரடித்து போனவர்களுக்கு இது போல வித்தியாசமான காய்கறிகள் போட்டு கொத்சு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி, தோசை, சாதம் மட்டுமல்லாமல் எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள அற்புதமான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த கத்தரிக்காய் கொத்சு 2 விசிலில் தயாராகிவிடும்! ரொம்பவே சுவையாக கத்தரிக்காய் கொத்சு எளிதாக எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

கத்திரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 2, உருளைக்கிழங்கு – 2, கத்தரிக்காய் – 3, தண்ணீர் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை.

- Advertisement -

கத்தரிக்காய் கொத்சு செய்முறை விளக்கம்:
கத்தரிக்காய் கொத்சு செய்ய முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கர் ஒன்றை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதற்கு மேல் சேர்க்க தேவையில்லை.

பின்னர் ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேருங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, வர மிளகாய், பச்சை மிளகாய் காரத்திற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் மூன்று மீடியம் சைஸ் கத்தரிக்காய்களை எடுத்து காம்பு நீக்கி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதே போல உருளைக் கிழங்குகளையும் நன்கு சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு நீளவாக்கில் மூன்று, நான்கு துண்டுகளாக நறுக்கி சேருங்கள்.

- Advertisement -

இப்போது குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுத்தால் போதும், நன்கு குழைய வெந்து விடும். உங்கள் குக்கருக்கு ஏற்ப விசில் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருடைய குக்கரில் வேகமாக விசில் வந்துவிடும். ஆனால் சிலருடைய குக்கரில் விசில் வருவதற்கே நேரம் எடுக்கும். இது அவரவர்களின் குக்கரை பொறுத்து! பின்னர் பிரஷர் முழுவதும் இறங்கியதும் மூடியைத் திறந்து ஒரு மத்து அல்லது கரண்டியை கொண்டு எல்லா காய்கறிகளையும் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். நல்ல ஒரு கெட்டி சட்னி அல்லது கிரேவி பதத்திற்கு இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப தேவை என்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் ஒரு சிறு எலுமிச்சை அளவு புளியை நன்கு கரைத்து சாறு எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். புளியின் பச்சை வாசம் நீங்க அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். அதற்குள் இன்னொரு அடுப்பில் தாளிக்கும் கரண்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்து சட்னியில் கொட்டி சுடச்சுட இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம், அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -