1 ஸ்பூன் மல்லி சேர்த்து இப்படி ஒரு முறை காரச்சட்னி செஞ்சி பாருங்க, நிச்சயம் எல்லோரும் அசந்து போயிடுவாங்க!

dhaniya-malli-chutney
- Advertisement -

காரச் சட்னிக்கு பொதுவாக வெங்காயம் அல்லது வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து செய்வது வழக்கம். அதனுடன் கொஞ்சம் மல்லி விதைகளை சேர்த்து இப்படி அரைத்து பாருங்கள், ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். சுவையான இந்த மல்லி காரச் சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்து பாருங்க எல்லோரும் அசந்து போயிடுவாங்க. இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு கூட கெட்டியாக வச்சி சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த காரச் சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 5, மல்லி விதை – ஒரு ஸ்பூன், பூண்டுப் பற்கள் – 8, பெரிய வெங்காயம் – 2, புளி – ஒரு கோலிகுண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் 5 வர மிளகாய்களை சேர்த்து கருக விடாமல் லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் ஆக இருந்தால் 8 மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மிளகாய் நல்ல நிறம் கொடுக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது. மிளகாயை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு அதே எண்ணெயில் மல்லி விதைகளை சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் அதனுடன் தோல் உரித்த பூண்டு பற்கள் போட்டு வதக்க வேண்டும். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய உடன் ஒரு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காயை நறுக்கி சேருங்கள் அல்லது துருவியும் சேர்க்கலாம்.

- Advertisement -

பின்னர் சிறிதளவு மல்லித்தழையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து அப்படியே அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறிய பின்பு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியதுதான்.

தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நன்கு எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கருவேப்பிலைகளை சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சுட சுட இட்லி, தோசை, சப்பாத்திக்கு கெட்டியாக தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். இதே போல நீங்களும் ஒருமுறை காரச்சட்னி வச்சு பாருங்க எல்லோரும் அசந்து போய் விடுவாங்க.

- Advertisement -