முட்டைகோஸ் கூட்டு இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் பத்தாது! சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து கூட சாப்பிடலாம்.

cabbage-kottu1
- Advertisement -

சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த முட்டைகோஸ் கூட்டு செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. அதிக சத்துக்கள் நிறைந்துள்ள முட்டைகோஸ் கூட்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான முட்டைகோஸ் கூட்டு கமகமக்கும் மணத்துடன் எளிதாக எப்படி செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முட்டைகோஸ் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, வர மிளகாய் – 2, பூண்டு – நான்கு பற்கள், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

முட்டைகோஸ் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் முட்டைகோஸை நன்கு சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அது போல் பாசிப்பருப்பு 100 கிராம் அளவிற்கு எடுத்து நன்கு சுத்தம் செய்து களைந்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 15 நிமிடம் நன்கு ஊறிய பின்பு அதை அப்படியே ஒரு குக்கரில் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் நறுக்கி வைத்துள்ள முட்டைக் கோஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 4 பூண்டு பற்களை தோலுரித்து பொடியாக நறுக்கி சேருங்கள்.

மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு எடுங்கள். பிரஷர் இறங்கும் வரை விட்டு விடுங்கள். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய், சீரகம், பெரிய பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளி மசிய வதங்கியதும் நீங்கள் குக்கரில் வேக வைத்துள்ள முட்டைகோஸ், பாசிப்பருப்பு கலவையை சேர்த்து கலந்து விடுங்கள். 2 நிமிடம் நன்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேருங்கள்.

தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடுங்கள். கூட்டு போல கெட்டியாக வைக்க இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட இதற்கு கொஞ்சம் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தழையை நறுக்கி தூவி சுடச்சுட பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -