ஒரே ஒரு முட்டையை வைத்து இப்படி பெரிய ஆம்லெட் செய்யலாம்

- Advertisement -

ஆம்லெட் செய்வது எப்படி | Fluffy egg omelette recipe in Tamil

பொதுவாக ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டு சாப்பிட்டு விடுவார்கள். குறிப்பாக பேச்சுலர்ஸ் இப்படித்தான் ஆம்லெட் போடுவார்கள் ஆனால் ஒரு முட்டையிலேயே இரண்டு மூன்று ஆம்லெட் சாப்பிடும் அளவிற்கு தடிமனாகவும், சுவையாகவும் வருவதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

முட்டை – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – 5, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த மிளகு – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு சிறிய பௌலில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து எவ்வளவு குட்டி குட்டியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு குட்டி குட்டியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் தான் முட்டைக்கு சுவை அதிகரித்து கொடுக்கும் எனவே இதை தாராளமாக சேர்க்கலாம். பின்னர் இவற்றுடன் ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். மிளகாய் உடைய விதைகள் வெளியில் வந்து விடக்கூடாது, பிறகு காரம் அதிகமாகிவிடும் எனவே கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் ஐந்து கறிவேப்பிலையின் இலைகளை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள், இது நல்ல ஒரு மணத்தை கொடுக்கும். ஆம்லெட் போடும் பொழுது சிலர் மஞ்சள் தூள் சேர்ப்பதில்லை ஆனால் மஞ்சள் தூள் சேர்க்கும் போது முட்டையின் பச்சை வாசம் முழுமையாக நீங்கும் என்பதால் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள். முட்டையில் ஏற்கனவே உப்பு இருக்கும் எனவே அரை உப்பு சேருங்கள். நன்கு பீட் செய்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லுக்கு பதிலாக ஒரு சிறிய வட சட்டியை வையுங்கள். வடசட்டியில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விடுங்கள். எண்ணெய் லேசாக காய ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் கலக்கி வைத்துள்ள முட்டையை அப்படியே ஊற்றுங்கள். எண்ணெயில் நன்கு முட்டை பொரிந்து பன்னு போல உப்பி வரும். பின்னர் இதன் மீது பொடித்த மிளகை தூவிக் கொள்ளுங்கள்.

பாதி அளவிற்கு வெந்ததும் திருப்பி போடுங்கள். திருப்பி போட்டதும் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விடுங்கள், இல்லை என்றால் தீய்ந்து போக வாய்ப்பு உண்டு. திருப்பி போட்டதும் உள்ளே எல்லா இடங்களிலும் நன்கு வேகுவதற்கு கரண்டியால் மெதுவாக கோடு போடுவது போல குத்தி விடுங்கள். இன்னும் ஆம்லெட் சூப்பராக மேலே எழும்பி உப்ப ஆரம்பிக்கும். அவ்வளவுதான் இப்பொழுது பொன்முறுவலான சூப்பரான சுவையுடன் கூடிய பன் ஆம்லெட் ரெடி! இந்த ஆம்லெட் செய்வதற்கு ஒருவருக்கு ஒரு முட்டையே போதுமானது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கு கண்டிப்பாக ரொம்பவே பிடிச்சிடும்!

- Advertisement -