பாசிப்பருப்பில் துவையல் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? சுவையான சிறு பருப்பு துவையல் 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

- Advertisement -

விதவிதமான சட்னி இருந்தாலும் கொஞ்சம் துவையல் இருந்தால் இன்னும் ரெண்டு இட்லி உள்ளே போகும். துவரம் பருப்பு துவையல், தேங்காய் துவையல், புதினாத் துவையல் என்று சாதாரணமாக எல்லோரும் செய்வது போல, இந்த பாசிப் பருப்பு துவையல் இதே முறையில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்டாக இருக்கும். வித்தியாசமான பாசிப்பருப்பு துவையல் எளிதாக எப்படி நம் வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இனி இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பாசிப்பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – தேவையான அளவு, வர மிளகாய் – 5, தேங்காய் துண்டுகள் – அரை கப், பாசி பருப்பு – 50 கிராம், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பூண்டுப் பற்கள் – 4, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பாசிப்பருப்பு துவையல் செய்முறை விளக்கம்:
பாசிப்பருப்பு துவையல் செய்ய முதலில் 50 கிராம் அளவிற்கு பாசிப் பருப்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வையுங்கள். அதில் கொஞ்சமாக ஒன்றரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் முதலில் வரமிளகாய் சேர்த்து கருகாமல் லேசாக உப்பி வர, நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தனியாக அதனை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் அதே எண்ணெயில் அரை கைப்பிடி அளவிற்கு தேங்காயை சில்லுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள் அல்லது நீங்கள் துருவலாக துருவிச் சேர்க்கலாம். தேங்காய் சேர்த்து 2 நிமிடம் லேசாக வதங்கியதும் அதையும் தனியாக எடுத்து ஓரமாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கொஞ்சமாக அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு நீங்கள் எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். நல்ல வாசம் வர பாசிப்பருப்பை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்த பின்பு அடுப்பை அணைத்து ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி போட்டு வதக்கி விடுங்கள். பிறகு நீங்கள் இவற்றை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்த எல்லா பொருட்களையும் சேர்த்து அதனுடன் 4 பல் பூண்டை தோலுரித்து சேருங்கள். புளிப்பு சுவைக்கு ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த துவையலுக்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக உப்பு சேர்த்து ரொம்பவும் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பாசிப்பருப்பு துவையல் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லி, தோசை, சூடான சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். புளி சேர்த்து உள்ளதால் 2 நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடலாம், கெட்டுப் போகாது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -