தக்காளி சட்னி செய்ய போறீங்களா? கொஞ்சம் புதினா போட்டு இப்படி செஞ்சு பாருங்க இன்னும் 4 இட்லி சாப்பிடலாம்!

mint-tomato-chutney
- Advertisement -

பொதுவாக தக்காளி சட்னி செய்யும் பொழுது வெறும் தக்காளியை மட்டும் பயன்படுத்தி செய்வது உண்டு, அல்லது அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து செய்வார்கள். ஆனால் வித்தியாசமான இந்த சட்னியில் கொஞ்சம் புதினா இலைகளையும் சேர்க்க இருக்கிறோம். ரொம்பவே சுவையாக இருக்கக் கூடிய இந்த புதினா தக்காளி சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, உங்களை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. சுவையான தக்காளி புதினா சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, புதினா இலைகள் – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான காய்கறிகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் அதே போல தோல் நீக்கி நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி உலர வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலை பருப்பு போட்டு நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இவை பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

இதனுடன் 2 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அதன் பின்னர் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். இப்போது சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் சுருள வதக்கி, தக்காளி வதங்கி வரும் வரை கலந்து விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதில் இதனை சேர்த்து ரொம்பவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும், அதற்காக ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சூப்பரான புதினா தக்காளி சட்னி ரெடி ஆகி இருக்கும். பத்து நிமிடத்திற்குள் எல்லா வேலைகளையும் சுலபமாக முடித்து சுவையான இந்த புதினா தக்காளி சட்னியை இட்லி, தோசையுடன் பரிமாறிக் கொள்ளலாம். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -