டீக்கடை மசால் போண்டா 10 நிமிடத்தில் எளிதான முறையில் வீட்டில் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கடையில போய் வாங்கவே மாட்டீங்களே!

masala-bonda3_tamil
- Advertisement -

டீக்கடையில் விதவிதமான போண்டாக்களில் மசாலா போண்டாவும் ஒன்று. உள்ளே மசாலாவும், வெளியே மொறு மொறுவென்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு டீ கடை மசால் போண்டா ரொம்பவே எளிதாக வீட்டில் எப்படி தயாரிப்பது? இந்த சமையல் குறிப்பு ரகசியம் தெரிந்தால் இனி டீக்கடைக்கு போய் இதை வாங்க வேண்டாம். நம் வீட்டிலேயே சட்டுன்னு போண்டா செய்து அசத்திடலாமே! வாருங்கள் இதை எப்படி செய்வது? என்று தொடர்ந்து பார்ப்போம்.

டீக்கடை மசால் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – ரெண்டு, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி துருவியது – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – நான்கு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு – ரெண்டு, நறுக்கிய மல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு.

- Advertisement -

போண்டாவிற்கு மாவு தயாரிக்க:
கடலை மாவு – இரண்டு கப், அரிசி மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – கால் டீஸ்பூன், சோடா உப்பு – இரண்டு சிட்டிகை, சூடான எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

டீக்கடை மசால் போண்டா செய்முறை விளக்கம்:
டீ கடை மசால் போண்டா செய்வதற்கு முதலில் ஸ்டஃப்பிங் மசாலா ரெடி செய்ய வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பின்னர் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்கள். கருவேப்பிலையை ஒரு கொத்து போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், துருவிய இஞ்சி, பொடி பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதை வதங்க தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். மசாலா வாசம் போக பிரட்டி விட்டதும் ரெண்டு உருளைக் கிழங்குகளை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை மசித்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாக்கள் அனைத்தும் உருளைக் கிழங்குடன் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான் இப்போது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

மேல் மாவு செய்வதற்கு ஒரு பவுலில் இரண்டு கப் அளவிற்கு கடலை மாவுடன், ஒரு கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். போண்டா உப்பி வருவதற்கு இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
5 நிமிசத்துல நல்லா காரசாரமா மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து இப்படி மோர் ரசம் வச்சு பாருங்க. இனி எப்ப ரசம் வச்சாலும் இதை தான் ட்ரை பண்ணுவீங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பின்னர் சூடான எண்ணெயை ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் ஆற வைத்துள்ள ஸ்டஃபிங் மசாலாவை உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவில் முக்கி சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு இரண்டு நிமிடம் கழித்து எல்லா புறமும் சிவக்க திருப்பி விடுங்கள். அவ்வளவுதாங்க, எண்ணெய் வற்றிய பிறகு சுடச்சுட தேங்காய் சட்னி, கார சட்னி உடன் பரிமாறி பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -