கோவில் சர்க்கரைப் பொங்கலின் ரகசியம் இதுதான். ஒருவாட்டி உங்க வீட்டில சர்க்கரை பொங்கலை இப்படி செஞ்சு பாருங்க. கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே சுவையும் மணமும் கட்டாயம் வரும்.

sarkarai-pongal2
- Advertisement -

தீபாவளிக்கு நோன்பு இருக்கும் வீட்டில் கட்டாயமாக சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். உங்க வீட்டில தீபாவளிக்கு சர்க்கரை பொங்கல் செய்யும் வழக்கம் இருந்தால், இந்த முறைப்படி கீழே சொல்லப்படும் அளவுகளை பின்பற்றி சக்கரை பொங்கலை செய்து பாருங்கள். கோவிலில் செய்த அதே சர்க்கரை பொங்கலின் சுவை உங்கள் வீட்டிலும் நிச்சயம் வரும். இப்படி செய்யும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம். தித்திக்கும் தீபாவளி வரப்போகுது. தித்திக்கும் சர்க்கரை பொங்கல் ரெசிபி உங்களுக்காக.

sarkarai-pongal1

முதலில் இந்த சர்க்கரை பொங்கலை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன அளவுகளில் வேண்டும் என்பதை பார்த்து விடலாம். பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் – 2 கப், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி திராட்சை ஏலக்காய் தூள் தேவைக்கு ஏற்ப, 7 லிருந்து 8 டேபிள்ஸ்பூன் நெய் கட்டாயமாக தேவைப்படும்.

- Advertisement -

முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக போட்டு தண்ணீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உறிய இந்த பொருட்களை தண்ணீரில் கழுவி 1 கப்பில் எடுத்துக்கொள்ளுங்கள். ஊறிய பின்பு இந்த பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் எந்த கப்பில் வைத்து இருக்கிறீர்களோ, அதே கப்பில் 2 1/2 கப் அளவு தண்ணீர் நமக்கு தேவைப்படும்.

sarkarai-pongal

ஊற வைத்திருக்கும் 1 கப் பாசிப்பருப்பு பச்சரிசியை குக்கரில் போட்டு, அதற்கு தேவையான அளவு 2 1/2 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி போட்டு 3 விசில் வைத்தால் போதும். சரியான அளவில் அரிசியும் பருப்பும் வெந்து நமக்கு கிடைத்துவிடும். அரிசியும் பருப்பும் வெந்து வந்தவுடன் பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அரிசியும் பருப்பும் குழைந்து வெந்து தளதளவென நமக்கு கிடைக்கும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக வெல்ல கரைசலை தயார் செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான தடிமனான பாத்திரத்தை வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் 2 கப் வெல்லத்தைப் போட்டு 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். கரைத்த இந்த வெல்லத்தை வடிகட்டி குக்கரில் வெந்து இருக்கும் அரிசியில் சேர்க்க வேண்டும். வெள்ளத்தை வெந்த அரிசியில் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி பின்பு குக்கரை அப்படியே கொண்டுபோய் அடுப்பில் வையுங்கள்.

sarkarai-pongal3

அடுப்பை வேகமாக வைத்துவிட்டு ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வெல்லத்தின் பச்சை வாடை நீங்கி, வெல்லமும் அரிசியும் ஒன்றாகக் கலக்கும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த இடத்தில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விட வேண்டும். இப்போது சர்க்கரைப்பொங்கல் குக்கரில் தயாராக உள்ளது. அடுப்பை அணைத்து விடுங்கள். (சர்க்கரைப்பொங்கல் சூடாக இருக்கும்போது ஒரு தட்டு போட்டு மூடி விடக் கூடாது. அதை திறந்தபடியே ஆற வைக்க வேண்டும்.)

sarkarai-pongal4

இறுதியாக சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யை கடாயில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பின்பு இதில் எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து விட்டு, இறுதியாக உலர் திராட்சைகளை போட்டு உலர்திராட்சை முட்டை முட்டையாக வந்தவுடன், இந்த தாளிப்பை கொண்டு போய் அப்படியே சர்க்கரை பொங்கலில் கொட்டிக் கலந்து விடுங்கள். ஆஹா அருமையான ருசி. மேல் சொன்ன இதே பக்குவத்தில் உங்கள் வீட்டிலும் நாளை சர்க்கரைப் பொங்கல் செய்து தித்திக்கும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -