காரசாரமான தக்காளி கார சட்னி இப்படி ஒருமுறை வச்சு பாருங்க, எல்லா டிபனுக்கும் செமையாக இருக்கும்! ருசியான தக்காளி கார சட்னி இப்படித்தான் செய்யனுமா?

spicy-tomato-chutney
- Advertisement -

வெங்காயம், தக்காளி போட்டு கார சட்னியை இதே மாதிரியான முறையில் நீங்களும் செஞ்சு பாருங்க ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். இட்லி, தோசை, அடை, ஆப்பம், ஊத்தாப்பம் என்று எல்லாவற்றுக்குமே கெட்டியான இந்த தக்காளி கார சட்னி தொட்டு சாப்பிட வாய் ஊறும் அளவிற்கு செமையாக இருக்கும். காரசாரமான தக்காளி கார சட்னி எப்படி வீட்டில் வைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 5, வர மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – 3, கருவேப்பிலை – இரண்டு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, நசுக்கிய பூண்டு – 2, கருவேப்பிலை ஒரு இணுக்கு.

- Advertisement -

தக்காளி கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக வதக்கிய பின்பு காரத்திற்கு ஏற்ப மிளகாய் வற்றலை சேர்த்து வதக்குங்கள்.

வற்றல் லேசாக வதங்கிய பின்பு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் 2 இணுக்கு கறிவேப்பிலையை உருவி கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்கு மசிந்து வரத் தேவையான அளவிற்கு உப்பை இப்பொழுது சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக தக்காளி, வெங்காயத்தை வதக்கிய பின்பு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

5 நிமிடம் மூடி வைத்தால் நன்கு மசிய சுலபமாக வந்துவிடும். இடையிடையே மூடியை திறந்து கிண்டி விடுங்கள். 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்ததும் தக்காளி நன்கு சுலபமாக மசிந்து இருக்கும். அதன் பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம், பெருங்காயத்தூள், இடித்த பூண்டு பல், கருவேப்பிலை மற்றும் ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விட்டால் எண்ணெய் பிரிய சட்னி கார சாரமாக சூப்பராக தயாராகி இருக்கும். இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், ஊத்தாப்பம் என்று எல்லாவற்றுக்குமே செமையாக இருக்கும், நீங்களும் செய்து ருசித்து பண்ணி பாருங்க.

- Advertisement -