வித்தியாசமான தக்காளி புதினா சட்னி 5 நிமிடத்தில் இப்படி வச்சு பாருங்க, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்!

takkali-puthina-chutney2
- Advertisement -

பொதுவாக வெங்காயம், தக்காளி சேர்க்கும் பொழுது புதினா சேர்த்து அரைத்தால் அதன் ருசியே வித்தியாசமாக இருக்கும். ஒரே மாதிரியான சட்னி செய்வதை விட, இது போல புதுமையான முறையில் சட்னி செய்து கொடுத்து பாருங்கள். எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது பத்தாது என்று சொல்லுவார்கள். ருசி மிகுந்த தக்காளி புதினா சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

தக்காளி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 2, வர மிளகாய் – 5, புளி – ஒரு சிறு நெல்லி அளவு, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், புதினா – அரை கைப்பிடி, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி, வெங்காயம் சுத்தம் செய்து தோல் உரித்து பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் உரித்து ஒரு சிறு துண்டு மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுபட்டதும் அதில் புளி மற்றும் இஞ்சி சிறு கோலி குண்டு அளவு உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுது நேரம் கழித்து வெட்டிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும் வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சேர்த்த பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். 2 நிமிடம் சிம்மில் அப்படியே விட்டுவிட்டால் பிறகு வந்து வதக்கும் பொழுது சுலபமாக இருக்கும்.

- Advertisement -

தக்காளி துண்டுகள் மசிய கரண்டியை வைத்து கொத்தி விடுங்கள். இந்த சமயத்தில் கொஞ்சம் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். புதினா இலைகள் சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த தக்காளி புதினா சட்னிக்கு இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

அதற்கு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் மீதம் இருக்கும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் தக்காளி புதினா சட்னி தயார். இதனுடன் சூடான இட்லி, தோசை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே முறையில் முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -