வறுத்து அரைத்த தக்காளி ரசம் இப்படி ஒருமுறை செஞ்சு கொடுத்தா வேறு குழம்பே கேட்க மாட்டாங்க!

tomato-rasam-recipe
- Advertisement -

பெரும்பாலான நேரங்களில் ரசம் இரண்டாவது குழம்பாக தான் இருக்கும். சில நேரங்களில் மட்டுமே ரசம் மட்டுமே முக்கிய குழம்பாக இடம் பெறுவது உண்டு. ரசத்தை சூப் போல சூப்பராக இப்படி செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்? ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து விடும் இந்த ரசம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடியதாக இருக்கிறது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ரசம் வறுத்து அரைத்து இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வேறு எந்த குழம்பையும் கேட்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த வறுத்து அரைத்த தக்காளி ரசம் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
புளி – பாதி எலுமிச்சை அளவு, பழுத்த தக்காளி – மூன்று, கடுகு – கால் டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – 2 கொத்து, மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு, பூண்டு – 10 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – அரை மூடி, உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

தக்காளி ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் வறுக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் துவரம் பருப்பு, வர மிளகாய் ஒன்று, சீரகம், தனியா, மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடு ஏற வறுத்தால் போதும். அதிகம் வறுத்து விட்டால் ரசம் வாசனை மாறிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான்.

rasam 1

இந்த வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். பாதி அளவிற்கு அரைத்து எடுத்ததும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து மீண்டும் நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பாதி எலுமிச்சை அளவிற்கு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய பின்பு பழுத்த தக்காளி பழங்களை நன்கு கைகளால் சாறு இறங்க பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்து எடுத்த விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வைத்து நுரை பொங்கும் வரை காத்திருக்கவும். மேலே நுரை எழும்பி கொதிக்க வரும் சமயத்தில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விட வேண்டும்.

rasam 2

இந்த ரசம் அதிகம் கொதித்தால் நன்றாக இருக்காது. பின்னர் ஒரு சிறு கரண்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து ரசத்துடன் கொட்டவும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமா நம் கைகளாலேயே மசாலா அரைத்து தக்காளி அதிகம் சேர்த்து செய்யப்படும் இந்த ரசம் அலாதியான சுவையில் இருக்கும். நீங்களும் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -