இப்படி ஒரு தக்காளி தொக்கு செஞ்சா 10 நாள் ஆனாலும் இதன் சுவை நாக்கை விட்டு போகாது. வேற லெவல் டேஸ்ட். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள செம்ம சைட் டிஷ்.

thakkali
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள பல வகையான சைடு டிஷ் இருந்தாலும், இந்த தக்காளி சட்னிக்கு என்று ஒரு தனி சுவை இருக்கும். புளிப்பு காரம் நிறைந்த தக்காளி சட்னி பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டிலும் செய்வோம். ஆனால் வித்தியாசமாக இந்த பொடியை அரைத்து போட்டு தக்காளி சட்னி செய்து பாருங்களேன். இது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த தொக்கு ஒரு வாரத்துக்கு கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை இதை வைத்து சாப்பிடலாம். சுட சுட இட்லிக்கு இதை தொட்டு சாப்பிட்டால் அப்பப்பா வேறு எதுவுமே வேணாம். அப்படிப்பட்ட ஒரு தக்காளி சட்னி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

1 கிலோ தக்காளிக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். தக்காளி பழங்களை நன்றாக கழுவி விட்டு, ஈரம் இல்லாமல் ஒரு துண்டில் துடைத்து மேலே இருக்கும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, 4 துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு வறுக்க வேண்டும். முதலில் கடாயில் வெந்தயம் சேர்த்து வறுக்கும்போது, லேசாக சிவந்த உடன், சீரகத்தை சேர்த்து உடனடியாக வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். சீரகம் வெந்தயம் கருகிவிட்டால் தக்காளி சட்னியில் லேசான கசப்பு இருக்கும். இதை வறுக்கும்போது பக்குவமாக வறுக்க வேண்டும். வருத்த இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே 1 ஸ்பூன் – கடுகு போட்டு இதை நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து 10 வர மிளகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இந்த 10 வர மிளகாய்களை அதில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் மிளகாய்கள் நன்றாக வெந்து கிடைக்கும். அடுப்பை அணைத்துவிட்டு, தண்ணீரில் இருந்து வடிகட்டி மிளகாயையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரை எடுக்க வேண்டும். அதில் வெட்டிய தக்காளி பழங்கள் மற்றும் தண்ணீரில் வேக வைத்த மிளகாயை போட்டு, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக கூட அரைத்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. அரைத்த எல்லா தக்காளி விழுதையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து அப்படியே வையுங்கள்.

இப்போது தக்காளி சட்னியை செய்ய தொடங்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி மிளகாய் விழுதை ஊற்ற வேண்டும். இப்போது மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தக்காளி சட்னிக்கு தேவையான அளவு உப்பு, இதை போட்டு நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து நன்றாக கலந்து விட்டு, 10 நிமிடங்கள் போல மிதமான தீயில் இந்த தொக்கை கொதிக்க வைக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாடை நீங்கி தக்காளி தொக்கு திக்காக வரவேண்டும். அதுவரைக்கும் இதை நன்றாக கலந்து கொண்டே இருங்கள். தொக்கு திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை தக்காளி தொக்கில் கொட்டி 1 நிமிடம் நன்றாக கலந்து விடுங்கள். மற்றொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 100ml நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், போட்டு மணக்க மணக்க தாளித்து இந்த எண்ணெயோடு தாளிப்பை அப்படியே தக்காளி தொக்கில் ஊற்றி இரண்டு நிமிடம் போல நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான்‌. மணக்க மணக்க சுவையான தக்காளி சட்னி தயார். இதை தக்காளி தொக்கு என்று கூட சொல்லலாம். நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்தால் கெட்டுப் போகாமல் இருக்கும். ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: இந்த தக்காளி தொக்கை நீங்கள் நாட்டு தக்காளி பழத்தில் செய்தால் புளி சேர்க்க வேண்டாம். சாதாரண தக்காளியில் செய்தால் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தக்காளி பழம் அரைக்கும் போது சேர்த்து அரைத்துக் கொண்டால், கூடுதல் சுவை கிடைக்கும். அது நம்முடைய விருப்பம் தான். இதில் புளிப்பு உப்பு காரம் எல்லாமே அதிகமாக இருக்கும். அடுப்பை அணைப்பதற்கு முன்பு தேவைப்பட்டால் இந்த தக்காளி தொக்கு 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கூட இதை பரிமாறிக் கொள்ளலாம். அதுவும் நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -