தங்க நகை சேர அஷ்டமி வழிபாடு

sourna ganapathy bhairavar
- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேசமயம் இன்னும் சில தெய்வங்களும் செல்வ வளத்தை அதிகரிப்பதற்குரிய தெய்வங்களாக திகழ்கின்றன. அந்த வகையில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும், ஸ்வர்ண கணபதியும் நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்க உதவக்கூடிய தெய்வங்களாக திகழ்கிறார்கள். இவர்களை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்வில் தங்க நகை சேர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்க நகைக்கு ஆசைப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள். தங்க நகைகளை அணிவதற்காக மட்டும் வாங்காமல் தங்களுடைய அவசர நிலைக்கு உதவுவதற்காகவும் ஒரு சிறந்த முதலீடாக இன்றைய காலத்தில் பலரும் தங்கத்தை வாங்கி வைக்கிறார்கள். ஆக தங்கம் என்பது நம்முடைய வாழ்க்கையில் என்றென்றும் நீக்கமற நிறைந்து இருக்க கூடிய ஒரு பொருளாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஆசைப்பட்டவுடன் அது நிறைவேறாது.

- Advertisement -

என்னதான் கையில் பணம் இருந்தாலும் தங்கத்தை வாங்குவதற்குரிய பிராப்தம் இருந்தால் மட்டுமே தான் ஒருவரால் தங்கத்தை வாங்க முடியும். அதே சமயம் வாங்கிய தங்கத்தை நிலையாக நம்முடன் வைத்திருக்க வேண்டும் என்றாலும் அதற்கும் நமக்கு பிராப்தம் இருக்க வேண்டும். நம்முடைய ஜாதகரீதியாகவோ அல்லது ஏதாவது தோஷங்களின் அடிப்படையிலோ தங்க நகை சேர்வதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தால் நம்மால் தங்கத்தை வாங்க முடியாது.

அதையும் மீறி நாம் வாங்கினாலும் அதை நம்முடன் வைத்துக்கொள்ள முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உண்டாகும். இப்படி எதுவாக இருந்தாலும் தங்க நகை நம்மிடம் சேர வேண்டும் நாம் அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலபைரவரையும் விநாயகப் பெருமானையும் வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக காலபைரவர் என்றதும் நம் நினைவிற்கு வருவது அஷ்டமி திதி தான். அஷ்டமி திதி விநாயகப் பெருமானையும் நாம் வழிபடும் பொழுது நமக்கு தங்க நகை சேர்வதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்ப்போமா? இந்த வழிபாட்டை நாம் வளர்பிறை அஷ்டமி அன்றோ அல்லது தேய்பிறை அஷ்டமி அன்றோ செய்யலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை அஷ்டமி திதி வரும் பொழுது நாம் விநாயகப் பெருமானையும் காலபைரவரையும் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்வில் தங்கத்திற்கு எந்த வித குறையும் இருக்காது.

இந்த வழிபாட்டுக்கு அஷ்டமி திதி அன்று மஞ்சள் நிறத்திலான ஆடையை முதலில் அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் கணபதியின் படத்திற்கு முன்பாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கக்கூடிய கோவில் அருகில் இருந்தால் அங்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். இயலாதவர்கள் சாதாரண கால பைரவரின் சன்னதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கோவிலுக்கே செல்ல இயலவில்லை என்றாலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை மனதார நினைத்துக் கொண்டு வீட்டிலேயே இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கும் சொர்ண ஆகர்சன பைரவருக்கும் தனித்தனியாக நெய்வேத்தியத்தை வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி, திராட்சை, தேனில் ஊறிய பேரிச்சம்பழம் இவை மூன்றையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக இவர்களுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் போடக்கூடிய திரியானது மஞ்சள் நிற திரியாக இருக்க வேண்டும். அடுத்ததாக ஸ்வர்ண கணபதியின் மூல மந்திரத்தை கூற வேண்டும்.

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!

அடுத்ததாக சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தை கூற வேண்டும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வர்ண பைரவாய ஹீம் பட் ஸ்வாஹா!

முதல் முறை இந்த மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது 888 முறை ஜெபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்பொழுதுதான் இந்த மந்திரம் சித்தியாகும். பிறகு ஒவ்வொரு அஷ்டமி திதி என்றும் 24 முறை ஜெபித்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: சித்ரா பௌர்ணமி தீப வழிபாடு

இப்படி தொடர்ந்து 24 அஷ்டமி திதிகளில் இந்த ஸ்வர்ண கணபதி மற்றும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் தங்க நகைக்கு எந்த வித குறையும் இருக்காது.

- Advertisement -