ஒருவருடைய வாழ்க்கையில் பணத்திற்கும் தங்க நகைக்கும் அதிக மதிப்பு இருக்கிறது. இது எப்பொழுது தெரியும் என்றால் நம்மிடம் அந்த பொருள் இல்லாத சமயம் தான் அதன் அருமையை நம்மால் உணர முடியும். பலரும் தங்களிடம் தங்க நகைகள் இருக்கும் பொழுது அதை முறையாக பராமரிக்கவோ, பாதுகாக்கவோ மாட்டார்கள்.
ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்த நகை அடமானத்திற்கு சென்ற பிறகோ அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் அந்த நகை இல்லாமல் போனாலோ தான் அந்த நகையின் அருமை அவர்களுக்கு புரியும். அப்படி பட்ட சூழ்நிலையில் தங்க நகையை திரும்பப் பெறுவதற்கும், புதிதாக தங்கத்தை வாங்குவதற்கும் சொர்ண ஆகர்ஷண பைரவரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தங்கத்தை குருபகவானாகவும் நகையை சுக்கிர பகவானாகவும் கூறியிருக்கிறார்கள். யார் ஒருவருக்கு குரு சுக்கிர சேர்க்கை இருக்கிறதோ யார் ஒருவருக்கு குரு சுக்கிரன் நல்ல இடத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தங்க நகை சேரும். அதற்கு மாறாக குரு சுக்கிரன் கெட்ட பலன்களை தரக்கூடிய இடத்தில் இருந்தால் தங்க நகையும் தங்களை விட்டு சென்றுவிடும். இதோடு மட்டுமல்லாமல் யார் ஒருவர் தங்க நகையை அவமதிக்கிறார்களோ அவர்களுக்கும் குரு சுக்கிர தோஷம் என்பது ஏற்பட்டு நகைகள் அவர்களிடம் தங்காமல் சென்று விடும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
தங்க நகை சேர சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
இந்த வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி தினத்தில் தான் செய்ய வேண்டும். அதுவும் ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு சிறிய பூசணிக்காயை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு முன்பாக இந்த பூசணிக்காயை இரண்டாக நறுக்கி அதற்குள் இருக்கக்கூடிய விதைகளை நீக்கிவிட்டு அதை சுற்றி மஞ்சள் குங்குமம் வைத்து அதற்குள் இலுப்பை எண்ணியை ஊற்றி மஞ்சள் நிறத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு கற்கண்டு அல்லது கற்கண்டு சாதத்தை நிறைவேற்றியமாக படைக்க வேண்டும். இப்படி செய்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் அதாவது தங்கம் சேர வேண்டும் அடகில் இருக்கக்கூடிய தங்கத்தை திருப்ப வேண்டும் என்ற வேண்டுதலை மனதார சொர்ண ஆகர்ஷண பைரவரிடம் வைக்க வேண்டும்.
ஒரு வேளை அருகில் சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஆலயம் இல்லாத பட்சத்தில் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரின் படத்தை வாங்கி வீட்டு பூஜையறையில் வைத்து சாதாரண தீபம் ஏற்றி வைத்து அவருக்கு நெய்வேத்தியம் வைத்து வழிபடலாம். ஆனால் முழு பலனையும் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆலயத்திற்கு சென்று தான் வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அவர் நமக்கு சுவர்ணத்தை ஆகர்ஷணம் செய்து தருவார்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் வர பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த வழிபாட்டை செய்து தங்க நகையை சேர்த்துக் கொள்ளலாம்.