இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நாவூறும் கிரேவியான சைடிஸ் அஞ்சே நிமிஷத்தில் இப்படி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!

- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தினமும் சட்னி செய்து அலுத்துப் போனவர்கள் இந்த மாதிரி கிரேவி டேஸ்டில் நாவூறும் படியான கெட்டியான சைடிஷ் தயிர் கொண்டு செய்து பாருங்கள். ஒரு கப் தயிர், ஒரு கப் பூண்டு இருந்தால் மடமடவென செய்து அசத்தி விடலாம். ருசியான பூண்டு தயிர் சட்னி வீட்டிலேயே எளிதாக எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பூண்டு தயிர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – 20, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், மல்லி தூள் – 2 டீஸ்பூன், சீரகத் தூள் – அரை டீஸ்பூன், தயிர் – 1 கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பூண்டு தயிர் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 2 மீடியம் சைஸ் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். 15 லிருந்து 20 பூண்டு பற்கள் இருக்க வேண்டும். இதனை ஒரு உரலில் போட்டு இடித்து ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சீரகத் தூள் இல்லை என்றால் சீரகத்தை இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்ததும் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெயை நன்கு சேர்த்து காய விடுங்கள்.

நல்லெண்ணெய் சேர்த்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் சூடேறியதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். இவை பொரிந்து வந்ததும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். கடலைப் பருப்பு நன்கு வறுபட்டதும் எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து எண்ணெயில் நன்கு பொறிக்க வேண்டும். பாதி அளவிற்கு பூண்டு நன்கு வதங்கிய பின்பு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மசாலாக்களின் பச்சை வாசம் போக நன்கு வறுபட்டதும் ஒரு கப் அளவிற்கு தயிர் சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்க்க இருக்கும் தயிரானது ரொம்பவும் புளிப்பு இல்லாமல், புளிப்பு தன்மை கொஞ்சமாக இருக்கக் கூடிய தயாராக இருப்பது நல்லது. பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. தயிர் ஊற்றியதும் கரண்டி அல்லது முட்டை அடிக்கும் பீட்டர் கொண்டு நன்கு கலந்து விட வேண்டும். அப்போது தான் தயிர் ஆங்காங்கே கட்டிகளாக சேராமல் நன்கு கலக்கும்.

பின்பு 5 நிமிடத்திற்கு மூடி வைத்து சிம்மில் அடுப்பை வைத்து விடுங்கள். நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு சட்னி தயார் ஆனதும் இறக்கி அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இந்த சைடிஷ் இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு கூட தொட்டுக் கொள்ள அற்புதமாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த தயிர் பூண்டு சட்னி இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -