சாதத்துக்கு, இட்லி, தோசைக்கு பிசைந்து சாப்பிட இப்படி ஒரு முறை தேங்காய் துவையல் வச்சு பாருங்க 10 நிமிடம் கூட ஆகாது! செம டேஸ்டாக இருக்கும்.

thuvaiyal
- Advertisement -

விதவிதமான தேங்காய் துவையலில் இதுவும் ஒருவகையான துவையல் இதை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ருசியான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த தேங்காய் துவையலை நம் கையால் வீட்டிலேயே எப்படி எளிதாக அரைப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன், வர மிளகாய் – 6, தேங்காய் – அரை மூடி, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு பற்கள் – 6, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.

- Advertisement -

தேங்காய் துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை எடுத்து அதை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து அதை கால் கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் அதிகம் வறுபடக்கூடாது கருகினால் சுவை மாறிவிடும். பின்னர் துருவி வைத்துள்ள தேங்காய் அல்லது தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். மிளகாயுடன் தேங்காய் சேர்ந்து இரண்டு நிமிடம் வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் தேங்காய் மற்றும் மிளகாயை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊற வைத்துள்ள புளியை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 6 பூண்டுப் பற்களை தோலுரித்து சேருங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீர் எதுவும் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து மற்றும் கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வர மிளகாயை கிள்ளி சேர்த்து, ஒரு இணுக்கு கறிவேப்பிலை போட்டு தாளித்து, பெருங்காயத்தூள் தூவி அடுப்பை அணைத்து துவையலுடன் சேர்த்து கலந்துவிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். இதை இட்லி, தோசை மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட அப்படியே பிசைந்து சாப்பிடலாம், ருசியாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி டேஸ்ட் பண்ணி பாருங்க.

- Advertisement -