திருவாதிரை களி செய்யும் முறை

thiruvathirai kali
- Advertisement -

நாளை 27.12.2023 அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் வீட்டில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களும், திருவாதிரை நோன்பு இருப்பவர்களும் திருவாதிரைக்களியை செய்து வைத்து வணங்குவார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் திருவாதிரை களி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

நோன்பு இருப்பவர்களும் விரதம் இருப்பவர்களும் தான் களி செய்து வணங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிவபெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த களியை செய்து வைத்து வணங்குவதன் மூலம் சிவபெருமானின் பரிபூரணமான அருளை பெற முடியும். மேலும் இந்த களியை விடியற்காலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாகவே வீட்டில் செய்து வைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 1 1/2 கப்
  • தண்ணீர் – 5 கப்
  • ஏலக்காய் – 3
  • நெய் – 3 டேபிள்ஸ்பூன்
  • துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு
  • முந்திரி – 15
  • உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சரிசியை ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். வறுத்த இந்த அரிசியை ஒரு அகலமான தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பையும் சேர்த்து சிவக்க வறுத்து பிறகு அரிசியுடன் சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உடைத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.கரைந்த இந்த வெல்லத்தை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு ரவையை விட சிறிய அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல கரைசலை ஊற்றிவிட்டு மீதம் இருக்கும் தண்ணியையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். லேசாக கொதிக்கும் பொழுது அதில் உப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், 2 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு அரைத்து வைத்திருக்கும் பச்சரிசியை அதில் சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.

கட்டி விழுகக் கூடாது. அனைத்தையும் சேர்த்து கட்டி விடாமல் நன்றாக கலந்த கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அதற்குள் ஒரு தட்டை போட்டு களியை அப்படியே எடுத்து வைக்க வேண்டும். பிறகு மூடி போட்டு மூன்று விசில் வரும் அளவிற்கு விட்டு விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு விசில் போன பிறகு அதை வெளியே எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுத்து தயாராக இருக்கும் களியில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மிகவும் சுவையான திருவாதிரை களி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ரோஸ் மில்க் பால்கோவா செய்யும் முறை

ஆன்மீகத்தில் விருப்பம் இருப்பவர்கள் வழிபாட்டிற்கு ஏற்ற பிரசாதத்தை செய்து வைத்து வழிபடுவதன் மூலம் முழுமையான பலனை பெற முடியும் என்ற நோக்கத்தில் இந்த திருவாதிரை களியை எளிமையாக செய்து விரதத்தின் முழு பலனையும் பெறலாம்.

- Advertisement -