இந்த குருமா உங்க வீட்ல வெச்சா, இதன் வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சிம்பிள் குருமா.

pottukadalai-kuruma1
- Advertisement -

இந்தக் குருமா கொதிக்கும் போதே இதனுடைய வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். அந்த அளவிற்கு மசாலா வாசம் நிறைந்த ஒரு குருமாவை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ பிரியர்கள் இந்த குருமாவை தவறாமல் சுவைக்க வேண்டும். அசைவம் சாப்பிடாத சமயத்தில் இந்த குருமா உங்களுக்கு நாவிற்கு நல்ல ருசியை கொடுக்கும். சுடச்சுட இட்லி தோசைக்கு மேல் ஊற்றி இதை பரிமாறினால் வேற லெவல் டேஸ்டில் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை பார்த்து விடுவோம்.

இந்த குருமாவுக்கு ஒரு ஸ்பெஷல் அரவையை அரைக்க வேண்டும். முதலில் அதை அரைத்து வைத்துக் கொள்வோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பிரியாணி இலை – 1, தேங்காய் துருவல் – 1/2 மூடி, பச்சை மிளகாய் – 3, பட்டை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் 2, சோம்பு – 1 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், தேவைப்பட்டால் முந்திரி பருப்பு – 5 போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், போட்டு ஒரு முறை வதக்கி விட்டு பின்பு மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2 சேர்த்து, குருமாவுக்கு தேவையான அளவு – உப்பு, போட்டு தக்காளி பழத்தை நன்றாக வதக்கி விடுங்கள்.

தக்காளி பழம் ஓரளவுக்கு வெந்து வந்ததும் 1 பெரிய கப் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து இதை கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள். உப்பு காரம் குறைவாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நாம் அரைத்திருக்கும் தேங்காய் அரவையில் மசாலா பொருட்களை பச்சையாக தான் சேர்த்திருக்கின்றோம். அதாவது கிராம்பு பட்டை லவங்கத்தின் வாசம் பச்சையாக தேங்காயில் அரைவையில் இருக்கும். இந்த தேங்காய் அரவையை குருமாவில் ஊற்றிவிட்டு, குருமாவை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

குருமாவுக்கு மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை, பச்சை வாடை நீங்கும் வரை, மிதமான தீயில் கொதிக்கவிட்டு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி சுட சுட சுவைத்து பாருங்கள். உங்களுக்கு இந்த குருமாவின் ருசி நிச்சயம் பிடிக்கும்.

- Advertisement -