வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம்

Vaitheeswaran Koil Pariharam in Tamil
- Advertisement -

ஜாதகத்தில் ஏற்படுகின்ற செவ்வாய் கிரக தோஷம் காரணமாக திருமண தடை ஏற்பட்டு அவதியுறும் திருமண வயதை அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் செய்ய வேண்டிய வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம் (Vaitheeswaran Koil Pariharam in Tamil) குறித்து விரிவாக இங்கு நாம் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

வைத்தீஸ்வரன் கோயில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அங்கு இருக்கின்ற நாடி ஜோதிட நிலையங்கள் தான். எனினும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நவகிரக திருத்தலங்களில் செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமாக விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில். இத்திருக்கோயிலின் மூலவர் தெய்வமான சிவபெருமான் வைத்தியநாத சுவாமி என்கிற பெயரிலும் அம்பாள் தையல்நாயகி என்கிற பெயரிலும் அருள்பாளிக்கின்றனர்.

- Advertisement -

நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு அடுத்தபடியாக வருபவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் ஒரு நபரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2,4,7,8,12 ஆகிய கட்டங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படுகிறது. செவ்வாய் தோஷம் என்பது ஆண் – பெண் இரு பாலர்களின் ஜாதகங்களிலும் ஏற்படுகின்ற ஒரு ஜாதக தோஷம் தான். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிரக பரிகாரத்தை முறையாக செய்து கொள்வது அவசியம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் என்பது அந்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தி, மனோ தைரியம், உடல் பலம், அசையா சொத்துக்கள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாக இருப்பதால் செவ்வாய் கிரகத்திற்குரிய பரிகாரத்தை முறையாக செய்யும் பொழுது மேற்சொன்ன விடயங்களில் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

- Advertisement -

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி செய்து கொள்ள மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இருப்பது வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி – தையல்நாயகி சமேத திருக்கோயில்.

வைத்தீஸ்வரன் கோயில் பரிகாரம் செய்பவர்கள் எந்த ஒரு மாதத்தில் வருகின்ற தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தன்று, அதிகாலை எழுந்து வைத்தீஸ்வரன் கோயில் திருக்குளத்திற்கு சென்று, குளத்தில் நன்கு மூழ்கி குளித்த பின், அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி, அந்த குளத்தின் ஓரத்தில் வைத்து விட்டு, புதிய ஆடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள்ளாக சென்று, அரச மரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதர் தெய்வ சந்நிதிகளில் வழிபாடு செய்த பிறகு, அங்கிருக்கும் ஆல மரத்தை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பின்பு மூலவர் சன்னிதியில் இருக்கின்ற மூலவர் தெய்வமான வைத்தியநாத சுவாமி மற்றும் தையல்நாயகி ஆகிய இரு தெய்வங்களுக்கும் மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதன் பிறகு அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூலவர் சன்னதிக்கு வந்து செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், திருநீறு அபிஷேகம் ஆகிய மூன்று வகையான அபிஷேகங்களை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, திருமண தோஷம் உள்ள ஜாதகர் அல்லது ஜாதகியின் பெயர், ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து கொண்டு, செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக இருப்பது துவரம் பருப்பு. வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார வழிபாடு செய்ய செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு கொண்டு செய்யப்பட்ட துவரை சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால் செவ்வாய் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நைவேத்தியம் வைத்த இந்த துவரை சாதத்தை கோவிலுக்கு வெளியில் இருக்கின்ற ஏழைகளுக்கு அன்னதானமாக கொடுப்பதால், ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற செவ்வாய் கிரக தோஷம் நீங்கி வேண்டிய பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷம் நீங்க பரிகாரம்

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று செவ்வாய் கிரக தோஷ பரிகாரம் செய்ய விரும்பும் நபர்கள் பரிகாரம் செய்கின்ற தினத்திற்கு முந்தினமே வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்திற்கு சென்று, இரவு அங்கேயே தங்கி, மறுநாள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்தால் நிச்சயமான பலன்களை பெறலாம் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -