நாக தோஷம் பரிகாரம்

Naga thosam pariharam in Tamil
- Advertisement -

பொதுவாக எல்லா மனிதர்களின் ஜாதகங்களிலும் யோகங்கள் இருப்பதைப் போலவே, ஜாதகர்களின் ஜாதகத்தில் தோஷங்களும் இருக்கும். ஜோதிட சாஸ்திரம் பலவகையான தோஷங்கள் குறித்து விவரிக்கின்றது. இதில் நாக தோஷம் என்பது அந்த தோஷம் உள்ள ஜாதகரை வாழ்வில் மிகவும் சோதனைக்கு உள்ளாக்கும் என கூறுகின்றது. குறிப்பாக ஜாதகருக்கு திருமண அமைவதில் சிக்கல் ஏற்படும் என கூறுகின்றது. எனவே இங்கு நாம் நாக தோஷம் பரிகாரம் (Naga thosam pariharam in Tamil) விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது முற்பிறவியல் பாம்புகளை அடித்து கொன்றிருந்தாலும், பாம்பு புற்றுகளை இடித்து இருந்தாலும், பாம்புகளை எந்த வகையிலாவது துன்புறுத்தி இருந்தாலும் அவருக்கு மறுபிறவியில் நாக தோஷம் ஏற்படுவதாக கருதப்படுகின்றது. ஒரு நபரின் ஜாதகத்தில் லக்னத்திலோ அல்லது லக்கினத்திற்கு 2,5,7,12 கட்டங்களில் ராகு அல்லது கேது கிரகங்களில், ஏதேனும் ஒரு கிரகம் இருந்தாலே அது நாக தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படுகின்றது.

- Advertisement -

நாக தோஷம் விலக பரிகாரம்

தங்களின் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தன்று ஆந்திர மாநிலம், புத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற காலஹஸ்தி திருக்கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4:30 மணிக்குள்ளாக நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்து, சிவ பெருமான் – பார்வதி தேவியை வழிபட்டு வீடு திரும்ப வேண்டும்.

மேற்சொன்ன காலஹஸ்தி கோவில் வழிபாடு செய்த ஒரு மாதத்திற்குள்ளாக, மீண்டும் ஒரு தேய்பிறை செவ்வாய் கிழமை தினத்தில் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் இருக்கின்ற அருள்மிகு திரு நாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்று, செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்து, சிவபெருமான் பார்வதி வழிபாடு செய்ய வேண்டும். மேற்ச்சொன்ன இரண்டு பரிகாரங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யும் பட்சத்தில் நாகதோஷம் நிவர்த்தி அடைந்து ஜாதகருக்கு திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை, வேலைவாய்ப்பின்மை போன்ற குறைகள் விரைவில் நிவர்த்தியாகும்.

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற கோயில்களில் இருக்கின்ற வேப்பமரம் அல்லது அரச மரத்திற்கு அடியில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால், மாதத்தில் வருகின்ற செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அந்த நாகங்களின் விக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தடவி, சுத்தமான காய்ச்சாத பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் பூசி சந்தனம் மற்றும் குங்குமம் பொட்டு இட்டு தூபங்கள் கொளுத்தி, வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் நாக தோஷம் காரணமாக வாழ்வில் ஏற்படுகின்ற இன்னல்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

கோயில்களில் இருக்கின்ற நவகிரக சன்னதியில் இருக்கின்ற ராகு – கேது விக்கிரகங்களுக்கு செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பச்சரிசி மாவு கொண்டு கோலமிட்டு, நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி, வாசனைப் பூக்களை சமர்ப்பித்து, கோளறு திருப்பதிகம் அல்லது ராகு – கேது கிரகங்களுக்கான மந்திரங்களை துதித்து வந்தால் ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷம் நிவர்த்தி அடைந்து எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு சர்ப்ப கிரகங்களும் ஆண் – பெண் தன்மையற்ற கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுவதால், ஆண் – பெண் இரண்டு தன்மையும் ஒருங்கே பெற்ற திருநங்கைகளுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களின் ஆசிகளை பெறுவதால் ஜாதகத்தில் இருக்கின்ற நாக தோஷத்தின் தீவிரத் தன்மை குறைந்து நல்ல பலன்கள் உண்டாகும்.

ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சமர்ப்பித்து, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட சாதத்தை நைவேத்தியம் வைத்து, தென்மேற்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து பூஜை மற்றும் மந்திர ஜபம் செய்து வழிபட்டால் நாக தோஷ நிவர்த்தி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும்.

ஜாதகத்தில் நாக தோஷம் இருந்து திருமணம் நடைபெறாமல் வருந்துபவர்கள் ஒரு காரட் அளவிற்கு மேலான தரமான கோமேதக கல்லை வெள்ளியில் பதித்து, மோதிரமாக செய்து வலது கை ஆட்காட்டி விரலில் அணிந்து கொள்வதால், நாக தோஷம் நிவர்த்தி அடைந்து மிக விரைவில் ஜாதகருக்கு திருமணம் யோகம் அமையும்.

- Advertisement -