முன்பெல்லாம் சமையலில் சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள். இன்று சிறுதானியங்கள் என்றால் என்ன? என்று நம் பிள்ளைகள் கேட்கிறது. சுவைக்காக மட்டுமே சாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு, வெறும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் இந்த சிறுதானியங்களை பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் வயதான பெரியவர்கள் கூட, நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக நன்றாக வேலை செய்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை, சிறு குழந்தைகள் கூட எதற்கெடுத்தாலும் சோர்வாக இருக்கிறது என்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தான உணவு எதுவும் கிடைப்பதில்லை. அதனால் இனியாவது ஏதாவது ஒரு சிறு தானியத்தை தினமும் கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் இன்று இந்த வரகு அரிசியில் செய்யும் அடையை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: வரகு – 1 கப், பாசிப்பருப்பு – 1/2 கப், வெங்காயம் – 1, கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி – சிறிது.
முதலில் வரகு அரிசி, பாசி பருப்பு, உளுந்து, மூன்றையும் ஒன்றாக கலந்து சமைப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே ஊற வைக்க வேண்டும். அதை கழுவி சுத்தம் செய்த பிறகு, வடிகட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அடை பதத்திற்கு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், போட்டு நன்றாக பொரிந்ததும், ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலையும், போட்டு வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு வதக்கியதை இந்த அடை மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை வதக்கியும் சேர்க்கலாம் இல்லை அப்படியே சேர்த்தாலும் சேர்க்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயம் சேர்த்து, சிறிது கொத்தமல்லி எடுத்து பொடி பொடியாக நறுக்கி அதையும் இந்த அடை மாவுடன் சேர்த்து விடுங்கள். இத்துடன் அறை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கல் நன்றாக காய்ந்ததும், கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி அடையை சுட்டு எடுங்கள். இதன் மேல் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டால் அடை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
இதற்கு சைடிஷ்யே தேவை இல்லை. உங்களுக்கு தேவை பட்டால் கார சட்னி, தேங்காய் சட்னி, அல்லது வெல்லம் போன்றைவைகளை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.