மசாலா பொருட்களை அரைத்து ஊற்றி, கமகம ‘வத்தக்குழம்பு’! ஒருவாட்டி, உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!

vatha-kuzhambu
- Advertisement -

வத்த குழம்பு, காரக்குழம்பு, காய்கறி குழம்பு, எதுவாக இருந்தாலும், அதில் மசாலாப் பொடி சேர்த்து செய்யாமல், நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வறுத்து அரைத்து செய்யும் போது அதன் வாசமும் சுவையும் தனியாகத்தான் இருக்கும். கொஞ்சம் வேலை எடுக்கும், என்று சிரமப்படாமல், சுலபமான முறையில் மசாலா பொருட்களை அரைத்த, வத்த குழம்பு எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை பக்குவமாக செய்யும் பட்சத்தில், பிரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் கூட சூடுபடுத்தி சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வத்தகுழம்பு எப்படி செய்வது? தெரிந்து கொள்ளலாமா!

vathakuzhambu

Step 1:
முதலில் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு புளியை, எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். தேவையான அளவு புளி கரைசலை தண்ணீர் பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பிற்கு நீங்கள் பயன்படுத்தும் புளி, கட்டாயம் பழைய புளியாக தான் இருக்க வேண்டும். வெள்ளையாக இருக்கும் புது புளியில், எந்த குழம்பு வகை செய்தாலும் அதில் சுவையும், நிறமும் குறைவாக தான் இருக்கும்.

- Advertisement -

Step 2:
முதலில் அரவையை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம். ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், முதலில் உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், வரமல்லி – 2 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 6(காரத்திற்கு ஏற்ப தேவைப்பட்டால் அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.), கறிவேப்பிலை – 1 கொத்து, இவைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவேண்டும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் இவைகள் பாதி அளவு சிவந்த பின்பு, மற்ற பொருட்களையும் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

puli-karaisal

இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைத்த பின்பு, மிக்ஸியில் போட்டு முதலில் கொரகொரப்பாக, தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, ஓரமா வச்சுடுங்க!

- Advertisement -

Step 3:
அடுத்ததாக அதே கடாயில், கொஞ்சம் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவேண்டும். அதன்பின்பு, தோல் உரித்த பூண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பூண்டு நன்றாக வதங்கியதும், ஒரு பழுத்த தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டி போட்டு, ஐந்து நிமிடங்கள் வரை வதக்கி, ஏற்கனவே மிக்ஸியில் கொரகொரப்பாக மசாலா பொருட்களை அரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா! அதில் இந்த வெங்காயம் தக்காளி பூண்டையும் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

aravai

Step 4:
எந்த குழம்பு வகை செய்தாலும் அதனை, கடாயில் செய்தால், குழம்பின் சுவை அதிகமாக இருக்கும். ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றவேண்டும். வடகம் அல்லது கடுகு தாளித்து, அதன் பின்பாக, வெந்தயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, 6 பூண்டுப் பல் – பொடியாக நறுக்கியது, சின்ன வெங்காயம் – 6,  பெருங்காயம் – 1/2 ஸ்பூன், இவை அனைத்தையும் நன்றாக வதக்கி இந்த இடத்தில் நீங்கள் தண்ணீராக கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, புளி கரைசலை 2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு, அதன் பின்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை சேர்த்து, தேவையான அளவு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவி, குழம்பில் சேர்த்து விடவேண்டும்.

- Advertisement -

sundaikai-vathal

Step 5:
குழம்பை மூடி போட்டு, கொதிக்க விடுங்கள். குழம்பு நன்றாக சுண்டி வரவேண்டும். இடையிடையே குழம்பை, கரண்டி விட்டு கலக்கி, மீண்டும் மூடி வையுங்கள். குழம்பு நன்றாக சுண்ட 15 நிமிடங்கள் வரை எடுக்கும். தீயை மிதமாக வைத்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து ஒரு பக்கம், சிறியதாக தாளிப்பு கரண்டி வைத்து, அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, உங்கள் வீட்டில் சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் எது இருந்தாலும் அதை வறுத்து குழம்பின் மேல் தூவி விட வேண்டும்.

வத்தலை தூவிய பின்பு, குழம்பு 7 நிமிடங்கள் வரை மீண்டும் நன்றாக கொதிக்க வேண்டும். குழம்பை ஒரு முறை கரண்டியை விட்டு நன்றாக கலந்து விடுங்கள். தண்ணீரெல்லாம் சுண்டி, நாம் ஊற்றிய எண்ணெய் மேலே தனியாக பிரிந்து வரும் பக்குவத்தில், குழம்பை இறக்கி வைத்து விடுங்கள். குழம்பிலிருந்து வரும் வசமானது பசியைத் தூண்டி விடும். சாப்பாட்டு பானை காலியாகிவிடும். உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை இந்த குறிப்பை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
மொறு மொறு, காரசாரமான டைமன்ட் சிப்ஸ்! ஒருவாட்டி உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -