வாழைத்தண்டு சட்னி செய்முறை

vazhaithandu chutney
- Advertisement -

ஒரு மரம் அந்த மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் மிகுந்த பொருட்களாக திகழ்கிறது என்றால் அந்த மரம் தான் வாழைமரம். வாழை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணம் மிகுந்த பொருட்களாகவே திகழ்கின்றன. பல நோய்களை தடுக்கும் ஆற்றல் மிக்கவையாகவும் இந்த மரம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியாக கருதப்படுவதுதான் வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டு வைத்து எந்த முறையில் சட்னி செய்தால் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வாழைத்தண்டில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்சத்தின் காரணமாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நச்சுக்கள் வெளியேறும். மலச்சிக்கல் பிரச்சனை வராது. அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படாது. மேலும் நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் வாழைத்தண்டை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சனையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வாழைத்தண்டு – 1/4 கிலோ
  • வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
  • தனியா – 1 டேபிள் ஸ்பூன்
  • பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 15
  • பச்சை மிளகாய் – 4
  • கொத்தமல்லி – அரைக்கட்டு
  • தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4

செய்முறை

முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு அதன் நாரை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும். இதனுடன் தனியா, பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, தேங்காய், உப்பு, புளி இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு முதலில் நாம் வறுத்து வைத்திருக்கும் தனியா பொட்டுக்கடலை வேர்க்கடலையை ஒரு முறை நன்றாக அரைத்து விட்டு பிறகு வாழைத்தண்டை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த துவையலை ஒரு பவுலில் மாற்றிவிட்டு தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக தாளித்து துவையலில் ஊற்றி விட வேண்டும். சட்னியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் உபயோகப்படுத்தலாம். வாழைத்தண்டு சேர்த்திருக்கிறோம் என்பது துளி கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு சுவையும் மிகவும் அற்புதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வேப்பம்பூ பொடி செய்முறை

பல அற்புதமான மருத்துவ குணம் கொண்ட வாழைத்தண்டை இந்த முறையில் சட்னி செய்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -