வாழைத்தண்டு கட்லெட் செய்யும் முறை

valaithandu cutlet
- Advertisement -

ஆரோக்கியமான உணவுகள் வரிசையில் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான உணவு தான் வாழைத்தண்டு. இந்த வாழைத்தண்டை ஏதாவது ஒரு ரூபத்தில் உள்ளுக்குள் நாம் எடுக்கும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய பலவிதமான நோய்கள் நீங்குகிறது. ஆனால் இந்த வாழைத்தண்டின் நன்மைகள் அறியாமல் குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழைத்தண்டை வைத்து எப்படி கட்லெட் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. மேலும் வாழைத்தண்டில் பொட்டாசியம், விட்டமின் பி6 போன்றவையும் நிறைந்திருக்கின்றன. இதை உணவாக உட்கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது. மேலும் சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் உடல் எடை இழப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதற்கும் உதவுகிறது. சரி இப்பொழுது கட்லட் செய்வது பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தேவையான அளவு

  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 3/4 டீஸ்பூன்
  • நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்பு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  • சோம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மைதா மாவு – 3 டீஸ்பூன்
  • பிரட் தூள் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிகவும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். இதன் பச்சை வாடை நீங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வாழைத்தண்டை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து இதில் சேர்க்க வேண்டும்.

வாழைத்தண்டு சிறிது வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வாழைத்தண்டு நன்றாக வெந்த பிறகு அதில் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கடைசியாக இறக்கும் பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையையும் தூவி இறக்க வேண்டும்.

- Advertisement -

இதில் வாழைத்தண்டை விட அதிக அளவு உருளைக்கிழங்கை சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது ஒரு பவுலில் மைதா மாவை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பிரட்டு தூள் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் வாழைத்தண்டு உருளைக்கிழங்கு எந்த அளவிற்கு கட்லெட் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு உருண்டையாக உருட்டி கட்லெட் வடிவத்திற்கு ஏற்றார் போல் அதை தட்டி கொள்ள வேண்டும்.

பிறகு தட்டிய இந்த கட்லெட்டை 2 புறமும் நன்றாக மைதா மாவு கலவையில் முக்கிய எடுத்து, பிறகு அதை அப்படியே எடுத்து பிரட்டு தூளில் போட்டு பிரட் தூள் அணைத்து இடங்களிலும் படும் அளவிற்கு பிரட்டி கொள்ள வேண்டும். பிரட்டிய இந்த கட்லெட்டை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஃபனை அடுப்பில் வைத்து அதில் கட்லெட்டை பொறிக்கும் அளவிற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கட்லெட்டை அதில் போட்டு இரண்டு புறமும் சிவக்க வரும் அளவிற்கு வேகவைத்து எடுக்க வேண்டும். சுவையான வாழை தண்டு கட்லெட் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: நெய் பூசணி செய்வது எப்படி

வாழைத்தண்டை கூட்டாகவும், குழம்பாகவும் செய்யும்பொழுது குழந்தைகள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள் என்பதால் இப்படி அவர்களுக்கு பிடித்தமான பொருட்களில் வாழைத்தண்டை சேர்த்து செய்து கொடுக்கலாம்.

- Advertisement -