ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் இந்த 6 விஷயங்களை மட்டும் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சியுடன் வாழ முடியுமா?

6-food
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்து இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கின்றான். ஆனால் உண்மையில் நடப்பது என்னவோ அதற்கு நேர்மாறானது தான். இன்பத்தை அனுபவிக்கும் மனிதன் துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் சம அளவில் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொண்டால் நிம்மதிக்கு குறைவிருக்காது. எனினும் இந்த 6 விஷயங்களை ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கலாம்! அந்த 6 விஷயங்கள் என்னென்ன?

1. உணவு
முதலில் மனிதன் தன்னுடைய வாழ்நாளில் தான் சாப்பிடும் உணவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமுள்ள மற்றும் தேவையான அளவிற்கு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் தன்னுடைய தேவைக்கு மீறிய உணவை வாய் ருசிக்காக சாப்பிட்டு தன் வாழ்நாளை குறைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. உணவை குறைத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

- Advertisement -

2. தூக்கம்
மனிதன் இரண்டாவதாக தன்னுடைய தூக்கத்தை குறைக்க செய்ய வேண்டும். ஒரு மனிதன் சராசரியாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தன்னுடைய உடல் நிலைக்கு ஏற்ப தூங்க வேண்டும். மற்ற நேரங்களில் சுறுசுறுப்புடன் தன் வேலைகளை செய்ய வேண்டும். தூக்கத்தை அதிகரிப்பவன் தன் வாழ்நாளைக் குறைத்துக் கொள்கிறான். தூக்கத்தை குறைத்துக் கொண்டு செயலில் அதிகம் ஈடுபடுபவன் சாதனையாளனாக மாறுகிறான்.

3. சோம்பல்
மூன்றாவதாக மனிதன் சோம்பலை குறைக்க வேண்டும். ஒரு சிலருக்கு 24 மணி நேரம் என்பது மிகவும் குறைந்த நேரமாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் அதில் பாதி நேரம் சோம்பல்தனம் காரணமாக வீணாகிவிடும். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்கள் முதலில் தன்னுடைய வாழ்நாளில் சோம்பலை குறைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

4. பேச்சு
புத்தி உள்ள மனிதர்கள் தேவையற்ற நேரங்களில், தேவையற்ற மனிதர்களிடம் பேசுவதில்லை. பிரச்சாரமும், விவாதமும் வீண் படாடோபம் என்பதை அற்ப ஞானம் உள்ளவர்கள் அறிவதில்லை. தேவையான நேரங்களில் மட்டும் உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் எடுத்து வைக்கலாம். மற்ற நேரங்களில் வாயால் பேச்சைக் குறைத்து அதிகம் காதால் கேட்பது மிகவும் நல்லது.

5. கஞ்சத்தனம்
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் கண்டிப்பாக கஞ்சத்தனத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும் தான், அதற்காக அதிக கஞ்சத்தனத்துடனும் இருக்கக் கூடாது. கஞ்சனிடம் இருக்கும் பணம் இருந்தும் பயனற்றதாகிவிடும். எனவே கஞ்சத்தனத்தை குறைத்து தாராளமாக மற்றவர்களுக்கு உதவி செய்வது புத்திசாலித்தனமாகும்.

6. கோபம்
கோபம் ஒரு மனிதனை வேறு ஒரு மனித மிருகமாக பிரதிபலிக்கிறது. கோபத்தை எந்த அளவிற்குக் குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு நீங்கள் உங்களுடைய வாழ்நாளில் இந்த கோபத்தை குறைத்து விட்டால், உங்களை அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போய்விடும். அதன் பிறகு நீங்கள் செய்யும் சிறு விஷயங்களுக்கு கூட மற்றவர்கள் கொடுக்கும் மரியாதை உயரும். கோபத்தை அடக்கி ஆள்பவனே திறமை உள்ளவனாக இருக்கின்றான். இந்த ஆறு விஷயங்களை நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் அளவிலிருந்து குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி அதிகரிக்க துவங்குவதை உணரலாம்.

- Advertisement -