கேரளாவில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் இந்த வெங்காய வடை தான் ஸ்பெஷல். இப்பொழுது மழைக்காலம் என்பதால் குழந்தைகள் வீட்டில் காரசாரமான மற்றும் கர, மொருவென இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்ற இந்த வெங்காய வடையை உங்கள் வீட்டில் சமைத்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் மீண்டும் ஒருமுறை வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வெங்காய வடை செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, மைதா மாவு – அரை கப், இஞ்சி –ஒரு சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 4, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.
முதலில் எடுத்து வைத்துள்ள நான்கு பெரிய வெங்காயங்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தினை மிகவும் தடிமனாக நறுக்காமல் சற்று மெல்லியதாக இருக்கும் வகையில் நறுக்கி கொள்ள வேண்டும். அப்போதுதான் வடை தட்டும் பொழுது வெங்காயம் உதிராமல் இருக்கும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பூண்டினையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நான்கு பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் பொடியாக இருந்தால்தான் பச்சை மிளகாய் சாப்பிடும் பொழுது வாயில் தட்டுப்படாமல் இருக்கும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு இரண்டு நிமிடங்கள் கைகளை பயன்படுத்தி வெங்காயத்தினை உதிரி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வெங்காயத்தில் இருந்து நீர் விட ஆரம்பிக்கும். அப்பொழுது அதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

பின்னர் அதனுடன் எடுத்து வைத்துள்ள அரை கப் அளவு மைதா மாவினை சிறிது சிறிதாக வெங்காயத்துடன் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். தண்ணீர் எதுவும் சேர்த்திடாமல் அப்படியே பிசைந்து கொள்ள வேண்டும். மைதா மாவினை முழுவதுமாக ஒரே தடவையில் சேர்த்து விடக்கூடாது. ஒருமுறை சிறிதளவு சேர்த்து பிசைந்த பின்னர் கொஞ்சம் நேரம் விட்டு விட்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்க்கும் பொழுது தான் வடை பிடிப்பதற்கு ஏற்ற சரியான பதத்திற்கு வரும்.
மைதா மாவு முழுவதையும் சேர்த்து பிசைந்த பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் போட வேண்டும். எண்ணெயில் போட்டு உடனே திருப்பி விடாமல் சிறிது நேரம் வெந்து வரும் பொழுது வடையினை திருப்பி போட வேண்டும். வடை பொன் நிறமாக மாறியவுடன் எண்ணெயில் இருந்து எடுத்துவிட வேண்டும்.
இந்த வடையை ஒருமுறை செய்து கொடுங்கள். வீட்டிலுள்ளவர்கள் உங்களை இன்னொருமுறை செய்து கொடுங்கள் என்று தொல்லை செய்வார்கள்.