டேஸ்டான வெண்டைக்காய் வறுவல் இப்படி செஞ்சா கண்டிப்பா நீங்க சாப்பிடற சாப்பாடு பத்தவே பத்தாது!

vendakka-fry1
- Advertisement -

வெண்டைக்காயா? அய்யோ வேண்டாம் என்று வெண்டைக்காயை வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு இது போல் ஒரு முறை வெண்டைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்கள், இனி தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இந்த வெண்டைக்காய் சமைக்க 12 நிமிடமே போதும்! வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மையை எப்படி எளிதாக நீக்குவது? சுவையான வெண்டைக்காய் வறுவல் மொறுமொறுவென்று எப்படி செய்வது? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vendakkai

வெண்டைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 300 கிராம், மிளகாய்த் தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, கறிவேப்பிலை ஒரு கொத்து, சமையல் எண்ணெய் தேவையான அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வெண்டைக்காய் வறுவல் செய்முறை விளக்கம்:
வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்க நீங்கள் வெண்டைக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின் பேன் காற்றில் கொஞ்ச நேரம் உலர வைத்து விடலாம். காலையிலேயே உலர விட்டுவிட்டால், மதியம் நீங்கள் சமைப்பதற்குள் உலர்ந்துவிடும். அல்லது எண்ணெயிலேயே வறுத்தாலும் ஐந்திலிருந்து, ஏழு நிமிடத்துக்குள் அதன் பிசுபிசுப்பு தன்மை அடங்கிவிடும்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் போடுங்கள். பின்னர் வர மிளகாய்களை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துத் தாளியுங்கள்.

- Advertisement -

பின்னர் நீங்கள் வெட்டி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் உலர வைத்து இருந்தால் சீக்கிரமே வதங்கி விடும். இல்லை என்றால் அதிகபட்சம் 7 நிமிடம் வரை நீங்கள் இடையிடையே வதக்கி விட்டு கொண்டிருந்தால் அதன் பிசுபிசுப்பு தன்மை எல்லாம் அடங்கி விடும். பிசுபிசுப்பு தன்மை இருக்கும் பொழுது நீங்கள் மசாலா பொடிகளை சேர்க்கக் கூடாது, அப்படி சேர்த்தால் வறுவல் நன்றாக வராது. வெண்டைக்காய் பிசுபிசுப்பு அடங்கி நன்கு வறுபட்டதும் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

vendakka-fry

பின்னர் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்க வேண்டும். நீங்கள் குழம்பு மிளகாய் தூள் சேர்ப்பதை விட, வெறும் மிளகாய் தூள் சேர்த்தால் வெண்டைக்காய் வறுவல் அட்டகாசமாக இருக்கும். மிளகாய், மஞ்சள் தூளின் பச்சை வாசம் போனதும், அதில் நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை பூ போல தூவி அடுப்பை அணைத்து சுடச்சுட சாம்பார் சாதம், தயிர்சாதம், கலவை சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டியது தான்! ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த வெண்டைக்காய் வறுவல் நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -