சுவையான வெங்காய கடலை சட்னி இப்படி செய்தால் தினமும் கூட சலிக்காமல் எவ்வளவு இட்லி வேணும்னா சாப்பிடலாமே!

verkadalai-chutney
- Advertisement -

சூடான இட்லியுடன் சுவையான வெங்காய கடலை சட்னி வைத்து பாருங்கள், எவ்வளவு இட்லி சாப்பிடுகிறோம் என்று கணக்கே தெரியாமல் வயிற்றிற்குள் போய்க் கொண்டே இருக்கும். சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இப்படி சட்னி வைத்து கொடுத்தால் சமத்தாக சாப்பிட்டு விடுவார்கள். ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த வெங்காய கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இனி பார்ப்போம்.

வெங்காயம் கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் – 4, சின்ன வெங்காயம் – 10, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, வர மிளகாய் – 4, தேங்காய் துண்டுகள் – அரை கைப்பிடி, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, வறுத்து தோல் உரித்து வைத்துள்ள – வேர்க்கடலை ஒரு கைப்பிடி, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

வெங்காய கடலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு வேர்கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வெறும் வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து எடுத்தால் தோல் உரிக்க எளிதாக வந்துவிடும். ஆறிய பின்பு வேர்க்கடலையை கையிலெடுத்து ரெண்டு கையால் தேய்த்தால் தோலெல்லாம் எளிதாக உரிந்து வந்துவிடும். அதற்கு பிறகு ஊதினால் பறந்துவிடும். தோல் உரித்து வைத்துள்ள வேர்கடலையை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்த்து லேசாக வதக்குங்கள். 2 நிமிடம் பூண்டு பற்களை வதக்கிய பின்பு தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். கண்ணாடி போல வெங்காயம் லேசாக சுருண்டு வந்ததும், ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் காரத்திற்கு 4 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேருங்கள். தக்காளி எதுவும் சேர்க்காததால் சிறிய நெல்லிக்காய் அளவிற்கு தோல் மற்றும் விதை நீக்கிய புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

2 நிமிடம் வதக்கிய பின்பு அரை கைப்பிடி அளவிற்கு துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சில்லுகளை சேர்க்க வேண்டும். லேசாக தேங்காய் வதக்கிய பின்பு தோல் உரித்து வைத்துள்ள வேர்கடலையை சேர்க்க வேண்டும். கடலை நன்கு சிவந்து வெந்து வர வதக்கி விடுங்கள். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு லேசாக வதக்கி அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இவற்றை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிப்பு கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சுடச்சுட எவ்வளவு இட்லிகள் கொடுத்தாலும் இந்த சட்னிக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

- Advertisement -