இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள வேர்க்கடலை வெங்காய சட்னி இப்படி செஞ்சு பாருங்க, 10 இட்லி கொடுத்தாலும் பத்தவே பத்தாது!

peanut-verkadalai-chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி அரைத்து போரடித்து போனவர்களுக்கு இது போல வித்தியாசமான சட்னி வகைகளை செய்து கொடுத்தால் 10 இட்லி இருந்தாலும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். வேர்கடலை வெங்காய சட்னி ரொம்பவே சுலபமாக வீட்டிலேயே இப்படி அரைத்தால், எல்லோரும் உங்களை பாராட்டித் தள்ளி விடுவார்கள். சுவையான வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வேர்கடலை – கால் கப், வெங்காயம் – 2, தக்காளி – 2, வர மிளகாய் – 5, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, பூண்டு – இரண்டு பற்கள், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எப்போதும் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கு தேவையான பொழுது எடுத்து சுலபமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தோலுரித்த வேர்கடலை மற்றும் தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலை பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தம் பருப்பு சேர்த்து இதே போல பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மீண்டும் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 2 நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் வரமிளகாய் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே எண்ணெயில் பூண்டு பற்களை வதக்கி பின்னர் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். இந்த சட்னிக்கு பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். இவை இரண்டும் நன்கு மசிய வதங்கியதும், ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக வதக்கிய பின்பு ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லித் தழையை சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.

மல்லி இலைகளுக்குப் பதிலாக புதினா இலைகளையும் பயன்படுத்தலாம். இவற்றை நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து வறுத்து வைத்துள்ள எல்லாப் பொருட்களையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். ரொம்பவே அற்புதமான சுவையுள்ள இந்த வேர்கடலை சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -