லஞ்ச் பாக்ஸ்-க்கு வெரைட்டி ரைஸ் வித்தியாசமா செய்யணும்னு ஆசைப்படுறீங்களா? இந்த ரைஸ் செஞ்சு குடுங்க… லஞ்ச் பாக்ஸ்ல ஒரு பருக்ககூட மிச்சம் இருக்காது.

lunch box vetrilai rice
- Advertisement -

ஸ்கூலுக்கும், காலேஜுக்கும், வேலைக்கும் செல்லும் நபர்களுக்கு மதிய சாப்பாட்டிற்கு வெரைட்டி ரைஸ் கொடுக்கும்போது எப்போதும் போல் ஒரே மாதிரி எலுமிச்சை சாதம், புளி சாதம் என்று சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு வித்தியாசமாகவும், அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய இந்த சாதத்தை தயார் செய்து கொடுத்து பாருங்க. நல்ல ஒரு மனநிறைவு இருக்கும். சத்தான இந்த சாதத்தை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் சுவையாக சாப்பிட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். அதில் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பதே கிடையாது. அதனாலேயே பலருக்கும் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. நாம் செய்யும் சமையலில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தாலும், அதை நாம் முழுமையாக உபயோகிப்பது கிடையாது. அப்படி உபயோகித்தோம் என்றால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். சிறு குழந்தைகள் முதலே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது வெற்றிலை சாதம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 6, கடலை பருப்பு – 2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், மல்லி – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு சிறியது – 10 பல், துருவிய தேங்காய் – 1/4 மூடி, நல்லெண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 4 ஸ்பூன், ஒரு கொத்து கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு, வடித்த சாதம் – 3 கப்.

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் கடலை பருப்பு, பூண்டு போட்டு வறுக்க வேண்டும். லேசாக வதங்கியதும் அதில் மல்லி, மிளகு சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு அதில் காய்ந்த மிளகாய் 4 மற்றும் காம்பு நீக்கப்பட்டு சிறிது சிறிதாக கில்லி வைத்திருக்கும் வெற்றிலையை போட்டு வதக்க வேண்டும். கடலை பருப்பும், பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதில் தேங்காயை போட்டு வதக்க வேண்டும்.

- Advertisement -

தேங்காயில் இருக்கும் ஈரப்பதம் போனதும் அதில் சீரகத்தை போட்டு இரண்டு கிண்டு கிண்டிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். வதக்கிய இந்த பொருட்கள் ஆரிய பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரவென்று பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, அடுப்பில் கடாயை வைத்து அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட வேண்டும். கடுகு வெடித்ததும் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு வடித்த சாதத்தை அதில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவு தான், வெற்றிலை சாதம் தயார். அடுப்பை அணைத்துவிட்டு பரிமாற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி சுவையான மசாலா முட்டை சாதம் இப்படி செஞ்சு பாருங்க அருமையாக இருக்குமே!

வெற்றிலை நம்முடைய ஜீரண சக்தியை மேம்படுத்தும். மேலும் பசியின்மை போக்கி, பசியை நன்றாக தூண்டி விடும். சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு இந்த சாதத்தை செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் சளி தொந்தரவில் இருந்து விடுபடுவர். விட்டமின் சி நிறைந்த இந்த வெற்றிலை சாதத்தை நாமும் நம் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவோம்.

- Advertisement -