காரிய வெற்றி பெற உதவக்கூடிய காரியசித்தி தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்ந்தவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரைப் போலவே காரிய வெற்றியை தரக்கூடிய மற்றொரு தெய்வமாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். மன தைரியம் கிடைக்கும், நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும், காரிய வெற்றி உண்டாகும், சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும் என்று கூறிக்கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு எந்த கிழமையில் வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வெற்றிலை மாலை பலன்கள்
ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் திகழ்கிறது. மேலும் மூல நட்சத்திரம் வரும் நாளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிமையான ஒரு செயலே. ஆஞ்சநேயருக்கு பிடித்தமான துளசி மாலையை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது ஆஞ்சநேயருக்கு உகந்த ஸ்ரீ ராம் அல்லது ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி மாலை கட்டி போடலாம்.
வடை மாலை சாற்றுவது, வெண்ணெய் சாற்றுவது, செந்தூரம் சாற்றுவது என்று நம்மால் இயன்ற வழிபாட்டை செய்யலாம். இத்தனை வாரங்கள் என்று கணக்கு வைத்து ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான மற்றொரு மாலையாக திகழ்வதுதான் வெற்றிலை மாலை. வெற்றிலை மாலையை எந்த கிழமையில் எப்படி போட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஏழு நாட்களும் நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களே. ஒவ்வொரு நாட்களிலும் எத்தனை எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு பிறகு அந்த செயலில் ஈடுபட்டோம் என்றால் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் அல்லவா?
திங்கட்கிழமை 11 எண்ணிக்கையில் வெற்றிலையை எடுத்து மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் தீராத கடன் பிரச்சினை தீரும். செவ்வாய்க்கிழமை 21 வெற்றிலையை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள். ஏன் பிரிந்து சென்ற தம்பதிகளே மீண்டும் ஒன்று சேர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
புதன்கிழமை 13 வெற்றிலைகளை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் திருமண தடை விலகும். புத்திர பாக்கியம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாழக்கிழமை 15 எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்ய குழந்தைகள் சிறப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள். கல்வி, ஞானம், அறிவு போன்ற அனைத்தும் உயரும்.
வெள்ளிக்கிழமை 11 என்ற எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவி உயர்வு உண்டாகும். சனிக்கிழமை 17 என்ற எண்ணிக்கையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் தொழில் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கர்ம வினைகள் குறையும். முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை 21 எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தீராத தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வெறும் வெற்றிலையை வைத்து கூட நாம் மாலை கட்டலாம். வெற்றிலைக்குள் கொட்டைப்பாக்கை வைத்து மாலை கட்டலாம். ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தும் மாலை கட்டலாம். இது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் தான். மாலை கட்டும்பொழுது பச்சை நிற நூலால் மாலை கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நெய்தீபங்களை ஏற்றி வைத்து ஆஞ்சநேயருக்கு பிடித்தமான லட்டுவை நெய்வேத்தியமாக வைத்து எட்டு வாரங்கள் என்று எண்ணிக்கையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை அஷ்டமி
மிகவும் எளிமையான இந்த வெற்றிலை மாலை வழிபாட்டை ஆஞ்சநேயரின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுக்கு அவர்களின் வழிபாடு முடிவதற்கு உள்ளாகவே வேண்டுதல்கள் நிறைவேறிவிடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.