நாகலோகத்திற்கு செல்லும் வழி இங்கு உள்ளது

nagalogam-vazhi

இந்து மத அடிப்படையில் நாகலோகம் என்பது நாக இனம் வாழும் ஒரு உலகமாகும். புராணங்களிலும், இதிகாசங்களிலும் நாகலோகம் பற்றிய பல தகவல்கள் உள்ளன. நாகலோகத்தை ஆட்சி செய்யும் தலைவன் நாகராஜன் என்றும் நாகதலைவன் என்றும் அழைக்கப்படுகின்றார். அவரது மனைவி நாக ராணி என்று அழைக்கப்படுகிறார்.

மகாபாரதத்தில் அர்ஜூனன் உலுப்பி என்னும் நாக இளவரசியை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் மகன் பிறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த மகன் தான் மகாபாரத போரின்போது பலிகொடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

ஆக இதிகாச நூல்களின் படி நாகலோகம் என்றொரு உலகம் இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த உலகத்திற்கு செல்லும் வழி, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பாதாள புவனேஸ்வரர் கோவிலில் உள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலின் குகைகளுக்குள் நுழைவது அவ்வளவு எளிதள்ளல. ஆன்மீகத் தேடலின் எல்லையற்ற பரம்பொருளின் இருப்பை யார் ஒருத்தர் உணர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் சரையூ, ராம் கங்கா, குப்த கங்கா கரையில் இருக்கும் பாதாளபுவனேஸ்வர் கோயிலுக்கு வருமாறு கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த குகைகளின் பல இடங்களில் ஒரே ஒரு ஆள் மட்டுமே நுழையக் கூடிய அளவில் தான் வழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் ஒரு புழுவை போல் வளைந்து வளைந்து தான் இந்த குகைக்குள் நுழைய முடியும். இந்த குகைக்குள் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனக்கூறி இதில் உள்ள சுரங்கத்தை தற்போது அடைத்துவிட்டார்களாம்.

சுரங்கத்தை அடைவதற்கு முன்பு 80 படிக்கட்டுகள் உள்ளன. படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிசேஷன் தலையில் பூமியைத் தாங்கியபடி இருக்கும் காட்சி. அதற்கு முன்னால் ஒரு யாக குண்டம் இருக்கிறது. இங்குதான் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித்தின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக நாக யாகம் செய்தான் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள சுரங்கத்தை முழுவதுமாக கடந்து சென்றால் நாகலோகத்தை அடையாளம் என்பது நம்பிக்கை.