கோதுமை மாவு வெங்காய பக்கோடா

wheat onion pakoda
- Advertisement -

மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது ஏதாவது ஒரு சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதுவும் மழைக்காலம் எனும் பொழுது சூடாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து வெங்காய பக்கோடா செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வெங்காய பக்கோடா என்று கூறும் பொழுது அதை கடலை மாவை உபயோகப்படுத்தி தான் செய்வோம். பலரது இல்லங்களிலும் கடலை மாவு என்பது அரிதாகவே இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால் கோதுமை மாவு என்பது அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் இருக்கும். அதனால் வெங்காய பக்கோடா செய்யும் பொழுது கோதுமை மாவை உபயோகப்படுத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • கேரட் – 1
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சமையல் சோடா – 1 சிட்டிகை
  • உப்பு – 1/2 டீஸ்பூன்
  • கோதுமை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த வெங்காயத்தை உதிர்த்து விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கேரட்டை தோல் சீவி பொடியாக நீளவாக்கில் வெங்காயம் இருக்கும் அளவிற்கு நறுக்கி அதையும் வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு சீரகம், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சமையல் சோடா, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக கலந்த பிறகு அதில் கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் இருந்து ஒரு குழி கரண்டி அளவு எண்ணெயை எடுத்து நம் வைத்திருக்கும் வெங்காய கலவையில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பக்கோடா முறுமுறுப்பாக இருக்கும்.

பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பக்கோடா மாவு தயாராகிவிட்டது. எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு பக்கோடா மாவை எடுத்து உதிரி உதிரியாக போட வேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்த பிறகு அதை தட்டில் எடுத்து வைத்து பரிமாறிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் பிரியாணி செய்முறை

வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து இந்த முறையில் பக்கோடா செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

- Advertisement -