மீதியான பழைய சாதத்தில் பிரியாணியின் சுவையை மிஞ்சும் அளவிற்கு மிகவும் அசத்தலான சுவையில் இந்த முட்டை சாதத்தை ஒரு முறை செய்து பாருங்கள்

egg
- Advertisement -

வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது வடிக்கின்ற சாதம் மீதி ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இப்படி மீதியாகும் சாதத்தை தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அல்லது அவற்றை மசாலா சேர்த்து அரைத்து வடகம் செய்து வறுத்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற விஷயங்களை தினமும் தொடர்ந்து செய்ய முடியாது. எனவே மீதியான சாதத்தை வீணாக்காமல் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் பிரியாணியின் சுவையை விட அதிகப்படியான சுவையில் இருக்கும் இந்த முட்டை சாதத்தை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும். எவ்வளவு சாதம் இருந்தாலும் அவை ஒரு பருக்கை கூட இல்லாமல் காலியாகிவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – ஒரு கப், முட்டை – 3, எண்ணெய் – 5 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் எண்ணெயிலேயே நன்றாக வதங்கி பச்சை வாசனை முழுவதுமாக மறைந்த பிறகு உப்பு சேர்த்து கலந்து விட்டு, கடாயில் இருக்கும் மசாலாவை ஓரமாக ஒதுக்கி வைத்து, மறு ஓரத்தில் இருக்கும் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

பின்னர் எண்ணெயில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே விட வேண்டும். அதன் பிறகு இவற்றை லேசாக கலந்துவிட்டு மசாலாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கப் சாதத்தை இவற்றுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர் சுட சுட இந்த சாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி கொடுத்து பாருங்கள். இதன் சுவையில் பிரியாணியின் சுவை தோற்றுவிடும். அந்த அளவிற்கு வாயில் வைத்தவுடன் எச்சில் ஊறும் அளவில் இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும்.

- Advertisement -