ஒருமுறை இப்படி சுவையான அரிசி, பருப்பு கிச்சடி செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள்

dal1
- Advertisement -

காலை உணவாக எப்போதும் செய்யும் இட்லி தோசையை தவிர்த்து சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடும் அளவிற்கு மிகவும் சுவையான இந்த பருப்பு கிச்சடியை ஒரு முறை செய்து தான் பாருங்களேன். இதன் சுவை சாம்பார் சாதம் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரிய அளவில் இதனை செய்வதற்கு காய்கறிகள் எதுவும் கூடத்தேவையில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே இந்த அருமையான உணவை சட்டென செய்துவிட முடியும். அரிசி, பருப்பு, மசாலா சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டால் போதும் சுவையான பருப்பு கிச்சடி தயாராகிவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – அரை கப், துவரம்பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 3, பூண்டு – 5 பல், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பச்சைமிளகாய் – 5, வரமிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் 5 பல் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதன்பின் 5 பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். பிறகு இரண்டு காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்

பின்னர் ஒரு குக்கரை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கப் அரிசி, கால் கப் துவரம்பருப்பு மற்றும் கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு 2 முறை நன்றாகக் கழுவி வைக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரை அடுப்பின் மீது வைத்து, விசில் போட்டு, 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்த பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளியையும் சேர்த்து, இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதர்க்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் இவற்றுடன் வேக வைத்துள்ள பருப்பு சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கலந்து விட்டு, உடனே பருப்பு சாதத்துடன் சேர்த்து கலந்து விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது இந்த சாதத்தின் சுவை மிக அற்புதமாக இருக்கும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -