இட்லி, தோசையை தவிர்த்து விட்டு ஒருநாள் இதுபோன்ற அசத்தலான சுவையில் பிரட் சில்லி ரெசிபியை செய்து கொடுத்துப் பாருங்கள். மிச்சம் வைக்காமல் முழுவதையும் சாப்பிட்டு முடிப்பார்கள்

bread
- Advertisement -

தினமும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, பொங்கல் என்று தான் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றோம். என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளையும் தான் சாப்பிட்டு பார்ப்போமே. இன்றைய மாடர்ன் உலகில் குழந்தைகள் சற்று வித்தியாசமாக அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தான் சாப்பிடும் உணவுகளையும் சற்று வேறு விதமாக செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். சிக்கனை சில்லி சிக்கன், சிக்கன் பெப்பர் ஃப்ரை என்று செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதுபோல் சைவ உணவுகளில் இட்லியையும் இவ்வாறு செய்து கொடுக்கலாம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது பிரட் சில்லி எப்படி செய்வது என்பது பற்றி தான். இதனை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பிரட் சில்லியை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரட் – 10 துண்டுகள், எண்ணெய் – 5 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – இரண்டு பல், வெங்காயம் – 2, தக்காளி – 2, குடைமிளகாய் – ஒன்று, பச்சைமிளகாய் – 2, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன், ரெட் சில்லி சாஸ் – ஒரு ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 10 பிரெட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ள வேண்டும்.

பிறகு இஞ்சி மற்றும் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். பின்னர் குடைமிளகாயை அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு, சிறு சிறு கியூப் வடிவத்தில் நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வானொலியை அடுப்பின் மீது வைத்து, ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். என்னை நன்றாக காய்ந்ததும் அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சேர்த்து விட்டு, தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து அனைத்தையும் முக்கால் பங்கு வேகும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசனை சென்றதும், இவற்றுடன் ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, இவற்றுடன் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும், கொத்தமல்லித் தழையையும் சேர்த்து சிறிது நேரம் கலந்து எடுத்தால் சுவையான பிரட் சில்லி தயாராகிவிடும்.

- Advertisement -