மதிய உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக இருந்தால் உடனே இந்த தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதத்தை செய்து கொடுங்கள்

pulav
- Advertisement -

தினமும் செய்யும் குழம்பு சாதத்தை விட, என்றாவது ஒருநாள் இது போன்ற கலவை சாதத்தை செய்து கொடுத்தால், அன்றைய தினம் ஒரு கைப்பிடி அளவு சாதம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். இப்படி மசாலா கலந்த உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த பிரிஞ்சி சாதத்தை ஒருமுறை இப்படி தேங்காய்ப்பால் சேர்த்து மிகவும் சுவையாக செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்கள் செய்த சாதம் அனைத்தும் ஒரு பருக்கை கூட மிச்சமில்லாமல் முழுமையாக தீர்ந்து விடும். இதில் மிளகாய் சேர்க்காமல் செய்யப்படுவதால் சாதம் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 2 கப், தேங்காய் – 1, பச்சை மிளகாய் – 7, உப்பு – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, கேரட் – 4, பீன்ஸ் – 10, பிரிஞ்சி இலை – 2, பட்டை சிறிய துண்டு – 2, ஸ்டார் பூ – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு தேங்காயை உடைத்து, அதனை பொடியாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கப் அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பின் மீது வைத்து எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின் தக்காளி, கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் உப்பு கொத்தமல்லி தழை புதினா தழை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் காய்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் 4 கப் தேங்காய் பால் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவேண்டும்.

இவை நன்றாக கொதித்ததும் இவற்றுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் குக்கரை மூடி, குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 7 நிமிடம் வேக வைத்த பின், அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் பிரிஞ்சு சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -